திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறு கிராமம் மாடப்பள்ளி. 1979ஆம் ஆண்டு துக்ளக் பத்திரிகையில் வெளியான ஸ்ரீ சூரிஜியின் பேட்டியைப் படித்து விட்டு அந்த ஊரைச் சேர்ந்த திரு. மூர்த்தி என்பவர் அந்த ஊரில் ஷாகா (ஆர்.எஸ்.எஸ். கிளை) துவக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதன் அடிப்படையில் ஆர்.எஸ். எஸ். பிரச்சாரக்கள் ஸ்ரீ ம. வீரபாகுஜி, ஸ்ரீ ஜோதிஜி ஆகியோர் அந்த ஊருக்குச் சென்று ஷாகா துவக்கினர். தினசரி நடைபெற்று வந்த இந்த ஷாகா அந்த ஊரில் மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது.
இதைக் கண்டு பொறுக்க முடியாத உள்ளூர் திராவிட கழகத்தினர் ஷாகா நடைபெறும் இடத்தில் நின்று கேலி செய்வது, கூக்குரல் இடுவது, இரவு நேரத்தில் மைதானத்தை அசுத்தம் செய்வது போன்ற செயல்களை செய்தனர். திரு மூர்த்தி அவர்களிடன் சென்று சமாதானமாக பேசிப் பார்த்தார். போக்கிரிதனம் நிற்கவில்லை.
மேலும் தி.க.வினர் வீடு வீடாக சென்று ஆர்.எஸ்.எஸ். காந்தியை சுட்ட இயக்கம். உங்க பிள்ளைகளை அனுப்பாதீர்கள் என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் மூர்த்தி மீது உள்ள அன்பின் காரணமாக மாணவர்கள் ஷாகா வந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து பிரச்சனை நடந்து கொண்டிருந்தது.
ஒரு நாள் ஸ்ரீ வீரபாகுஜி, ஸ்ரீ ஜோதிஜி இருவரும் அந்த ஊர் தி.க. செயலாளர் ஆசிரியர் திரு பழனி என்பவரை சந்தித்து ஆர்.எஸ்.எஸ். பணிகளைப் பற்றி விளக்கினர். ஆனாலும் அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.
ஸ்ரீ வீரபாஜி கடைசியாக, “நீங்கள் கற்பனையாக குற்றம் சாட்டுகிறீர்கள். இது ஜனநாயக நாடு. உங்க கருத்தை சொல்லவும், இயக்கம் நடத்தவும் உங்களுக்கு உள்ள உரிமை போன்று எங்களுக்கும் உள்ளது. யார் வழியையும் யாரும் தடை போட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறிவிட்டு எழுந்து விட்டார்.
ஸ்ரீ வீரபாகுஜியின் பேச்சுக்கு பிறது சில காலம் பிரச்சனை இல்லாமல் இருந்தது. திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் பழனி மற்றும் மூன்று பேர் கையில் ஒரு டப்பாவுடன் ஷாகா நடக்கும் மைதானத்திற்கு வந்தனர். எதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டினர். அவர்கள் வந்து ஒரு திண்டில் அமர்ந்து கொண்டனர்.
ஷாகா முடிந்த பின் எல்லோரும் கலைந்து செல்ல இருந்த போது, அவர்கள் உள்ளே வந்தனர். “தம்பிகளா. ஒரு நிமிஷம். இன்று ஈ.வே.ரா பிறந்த தினம். கடந்த சில தினங்களாக உங்கள் பயிற்சியை நான் எதிரில் உள்ள கடையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். ஈ.வே.ரா கண்ட சமத்துவ சமுதாயத்தை நீங்கள்தான் உண்மையில் உருவாக்கி வருகிறீர்கள். இந்த ஊருக்கு ஈ.வே.ரா.வை அழைத்து வந்து கூட்டம் நடத்தியவன். ஆனால் எங்களால் செய்ய முடியாததை நீங்கள் தினசரி செய்து கொண்டிருக்கிறீர்கள். செட்டியார் வீட்டுப் பையன்களும், வெள்ளாளர் வீட்டுப் பையன்களும், வண்ணார் வீட்டுப் பையன்களும், வன்னியர் வீட்டுப் பிள்ளைகளும், குறும்பர் சமுதாயப் பிள்ளைகளும் ஒன்றுகூடி எந்தப் பாகுபாடும் இல்லாமல் விளையாடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்” என்று வாழ்த்தி இனிப்புகளை எல்லோருக்கும் வழங்கினார். அது முதல் அவரும் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர் ஆகிவிட்டார்.
ஒரு ஊரில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா ஆரம்பிக்கப்பட்டால், அந்த ஊரில் சமுதாய நல்லிணக்கம் ஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
#