வியாழன், 21 டிசம்பர், 2023

பட்டியல் சமுதாய மக்களை கோயிலுக்குள் அழைத்து வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ்.


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கே.வேலூர் கிராமம். பட்டியல் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் மத்தியில் ஸ்ரீ ஆதிகேவசப் பெருமாள் கோயில் உள்ளது. சில கிராமங்களைப் போல இந்த ஊரியிலும் பட்டியல் சமுதாய மக்கள் இந்த கோயிலுக்குள் நுழைய முடியாது. இதுதான் 2005ஆம் ஆண்டு வரை இருந்த நிலைமை.

2006ஆம் ஆண்டு இந்த நிலைமை மாறிவிட்டது. காரணம் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் பணி.

அப்போதைய வேலூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளராக இருந்தவர் திரு தேவநாதன். ராணிப்பேட்டையை மையமாக வைத்து, அவர் வேலூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆர்.எஸ்.எஸ் ஷாகா ஆரம்பிப்பது வலுப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருந்தார்.

அவருடைய மாமனார் ஊர் கே.வேலூர். அங்கு திரு தேவநாதன் முயற்சியால் ஒரு ஷாகா ஆரம்பிக்கப்பட்டது. திரு தேவநாதன் தன்னுடைய மாமனார் திரு ரங்கநாதச்சாரியாரிடம் ஆர்.எஸ்.எஸ்., இந்து ஒற்றுமை, மதமாற்றம், தீண்டாமை குறித்து பேசுவார். அவர் மனதில் இந்து ஒற்றுமை, சமுதாய நல்லிணக்கம் விதையை விதைத்தார்.

திரு ரங்கநாதாச்சாரியார் பள்ளி ஆசிரியர். அவர் பல கிராமங்களில் ஆசிரியராகப் பணியாற்றி நல்ல பேரை எடுத்தவர். அத்துடன் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். சமுதாய நல்லிணக்கம் விதை அவரது மனதில் விளைய ஆரம்பித்தது.

திரு. ரங்கநாதாச்சாரியார் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் அந்த ஊரில் பழையடைந்து இருந்த ஸ்ரீ ஆதிசேகவப் பெருமாள் கோவிலை புணர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் நடத்த விரும்பினார் அதற்காக தன் வயதையும் பொருட்படுத்தாமல் பலரிடம் சென்று நிதி சேகரித்தார். பராமரிப்பு பணிகளையும் தானே நேரில் கவனித்தார்.

கும்பாபிஷேகத்திற்கு தேதி மற்றும் மற்ற விஷயங்களைப் பற்றி ஆலோசிக்க ஊர் முக்கியஸ்தர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை எப்படி நடத்துவது என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்தார்கள்.

திரு ரங்கநாதச்சாரியார் முறை வந்ததும். அவர் குறிப்பிட்டார். “கும்பாபிஷேகத்தை இந்த ஊரில் உள்ள அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும்” என்றார். அந்த கூடியிருந்த அந்த முக்கியஸ்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'நாம் எல்லோரும் சேர்ந்துதானே இது நடத்தப் போகிறோம் நீங்க என்ன சொல்ல வரீங்க' என்று கேள்விக்குறியுடன் அவரை பார்த்தனர்.

அப்போது அவர் விவரமாக பேசினார். “இந்தக் கோவிலுக்குள் இதுநாள் வரை பட்டியல் சமுதாய மக்கள் நுழைந்ததில்லை. இனி அவர்களையும் இந்த கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். இந்த கோவில் கும்பாபிஷேகப் பணியிலும் அவர்களது பங்கும் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. வேறு யாராவது இக்கருத்தைக் கூறியிருந்தால் அங்கு என்ன ஆயிருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த கருத்தைச் சொன்னவர் அந்த ஊரில் மட்டுமல்ல, பக்கத்து பல கிராம மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர்; ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவரின் இந்த கோரிக்கை ஊர் முக்கியஸ்தர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

ஆனாலும் திரு. ரங்கநாதாச்சாரியார் தொடர்ந்து தன் கோரிக்கைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்தார். கடைசியில் ஊர் முக்கியஸ்தர்கள் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

இந்த விஷயத்தை பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டாச்சாரியாரே நேரில் சென்று தெரிவித்தார். அவர்களுக்கும் ஒரே ஆச்சரியம். நாட்டில் எந்த மாற்றம் வந்தாலும் அது இந்த கிராமத்தில் எட்டாக கனியாக இருக்கும் என்று எண்ணியவர்கள், தற்போது எட்டும்கனியாகி விட்டது உணர்ந்து உற்சாகம் ஆகினர்.

கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி விரதம் இருந்து. நெற்றியில் திருமண இட்டு பயபக்தியோடு கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்டனர்.

அந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பட்டாச்சாரியாரின் மகன் திரு முகுந்தன் கூறுகிறார்.  “இந்த கிராமத்தில் பட்டியல் சமுதாய மக்கள் காலடி படாத பகுதி எதுவுமே இல்லை - இந்த கோவிலை தவிர. இந்த கோவிலுக்குள் அவர்கள் நுழைந்ததே இல்லை. நீங்களும் கோவிலுக்கு வரலாம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு ஒரே சந்தோஷம். அவர்களிடம் இருந்த சந்தோஷத்தில் கோவிலுக்குள் நுழைந்தவுடன் இங்க இன்ன சாமி இருக்கு அங்க என்ன இருக்கு என்று அங்கும் இங்கும் ஒடியதைப் பார்த்தது என் கண்முன்னே நிற்கிறது. அவர்களுக்கு இத்தனை நாள் தீங்கு விளைத்து விட்டோம் என்பதை உணர்ந்தேன்.”

பட்டாச்சாரியாரின் உபதேசங்கள் ஊருக்கு மட்டுமல்ல. தன் சொந்த வீட்டிலும் கடைப்பிடித்தார். நாங்கள் கோவிலுக்கு சென்று ஊர் மக்களிடம் கலந்து உரையாடிவிட்டு பட்டாச்சாரியாரின் வீட்டுக்கு வந்து இரவு உணவு சாப்பிடோம். அப்போது பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் எங்களுடன் உணவு உண்டனர்.

நகரத்தில் ஜாதி வேற்றுமைகள் அவ்வளவாக பார்ப்பதில்லை. ஆனால் கிராமத்தில் அது ரத்தத்தில் ஊரிய விஷ(ய)ம். ஆனால் ஊரில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டது என்றால் அதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.

  • (2006ஆம் ஆண்டு ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழாவை யொட்டி அகில பாரத அளவில் சமுதாய நல்லிணக்க மலர் ஒன்று இந்தியில் வெளியிடப்பட்டது. அதில் வட தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சம்பவங்கள் பிரசுரம் ஆகியது. அதில் ஒன்று இந்த கே.வேலூர். மற்றொன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகிலுள்ள ஜோதிஹள்ளி கிராமம்).
#

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக