வியாழன், 21 டிசம்பர், 2023

இட ஒதுக்கீடு: ஆதரவளித்த ஆர்.எஸ்.எஸ்.



குஜராத்தில் 1988இல் இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஒரு பிரச்னை ஏற்பட்டது. குஜராத் சட்டசபையில், பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வரப்பட்டது. இட ஒதுக்கீட்டை ஆதரித்தும், எதிர்த்தும் மிகப் பெரிய போராட்டங்கள் அப்போது நடைபெற்றன.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத பிரதிநிதி சபை கூட்டம் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த கூட்டத்தில் இட ஒதுக்கீட்டை ஆதரித்து அறிக்கை வெளியிடுவதற்காக வாசகம் அனைத்து பிரதிநிதிகள் முன்பு வைக்கப்பட்டது. அறிக்கை வாசகங்கள் குறித்து பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இட ஒதுக்கீடு ஆதரவு அறிக்கை வாசகத்தைப் பார்த்ததும் குஜராத் ஊழியர்கள் மிகவும் வேதனைப்பட்டனர். அதன் ஒவ்வொரு சொல்லையும் எடுத்துக்கொண்டு விரிவாக விவாதம் நடத்தப்பட்டது. பலர் ஆதரித்தும், பலர் எதிர்த்தும் பேசினார்கள்.

அப்போது சங்கத்தின் மூன்றாவது தலைவர் ப.பூ.ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ்ஜி அனைத்து விவாதங்களையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் இவ்வாறு பேசினார்:

“இட ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை மீது நடைபெற்ற விவாதம் முழுவதையும் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நம்மில் சிலர் இந்த அறிக்கையை எதிர்க்கின்றனர். இதுவும் கவனத்திற்கு வந்தது. இட ஒதுக்கீடு பயன் பெறுபவர்களின் மனநிலையில் இருந்து நாம் இந்த பிரச்னையை ஆராய வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன். நான் தங்கள் எல்லோரிடமும் வேண்டிக்கொள்வது, பல நூறு ஆண்டுகளாக கவனிக்கப்படாமல், ஒதுக்கி வைக்கப்பட்ட நமது சகோதரர்களின் இன்றையநிலை என்ன என்பதை பாருங்கள். அவர்களது உணர்வுகளை எண்ணிப் பாருங்கள். அதன்பிறகு இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வாருங்கள்” என்றார்.

ஸ்ரீ தேவரஸ்ஜி இவ்வாறு பேசியபிறகு அறிக்கை மீது குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் நடைபெறவில்லை. உடனே அறிக்கை ஏற்கப்பட்டது. இவ்வாறு சங்கம் அதிகாரப்பூர்வமாக இட ஒதுக்கீட்டை ஆதரித்தது.

இதேபோல மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டும் போது ஏற்பட்ட போராட்டத்திலும் ஸ்ரீ தேவரஸ்ஜி, டாக்டர் அம்பேத்கர் பெயருக்கு ஆதரவாகப் பேசினார்.

சமுதாயத்தில் சமரஸதா ஏற்பட வேண்டும் என தீவிரமாக இருந்தவர் ஸ்ரீ தேவரஸ்ஜி. “வர்ண முறை, ஜாதி முறை இவை தற்போது முறையற்றவை யாகிவிட்டன.  ‘தீண்டாமை பாவம் இல்லையென்றால் உலகில் வேறு எதுவும் பாவமில்லை’. எனவே அதனை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க  வேண்டும்” என்று கூறினார்.

சமுதாயத்தில் சமரஸதா மனப்பான்மையை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

#  



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக