கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகிலுள்ளது திருவதிகை. இங்கு வீரட்டனேசுவரர் கோயில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோயில்களில் ஒன்று.
சில காலம் சமண மதத்தை தழுவியிருந்த திருநாவுக்கரசரை (அப்பர்) சைவத்துக்கு கொண்டு வந்த திருத்தலம். திலகவதியார் தன் தம்பியாகிய மருள்நீக்கியாரை (அப்பர்) நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுரைத்து ஆட்கொண்ட திருத்தலம். இவர் முதலில் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம்.
இப்படிப்பட்ட புனித தலத்தில் ஆர்.எஸ்.எஸ். யோகா ஷாகா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமுதாயத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், வியாபாரிகள் தினசரி காலை வேளையில் சந்தித்து யோகா பயிற்சி செய்து, சமுதாயத்தைப் பற்றியும் சிந்திப்பார்கள்.
2006 ஸ்ரீ குருஜி நூற்றாண்டு சமயத்தில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த ஷாகாவைச் சேர்ந்த உறுப்பினர்களும் தங்கள் ஊரில் சமுதாய நல்லிணக்கம் ஏற்பட ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தார்கள்.
இதற்காக பண்ருட்டியில் சமுதாய நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். தென் பாரதத் தலைவர் திரு இரா. வன்னியராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 18 ஜாதி சங்கங்களிலிருந்து 64 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சமுதாய பிரச்சனை குறித்து அனைவரும் தங்கள் கருத்தை தெரிவித்தனர். ஹிந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு சமுதாய நல்லிணக்கப் பணிகள் செய்வதென முடிவு செய்யப்பட்டது. ஜாதி வேறுபாடு களால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த இந்த மாவட்டத்தில், சமுதாயத்தில் நல்லிணக்கம் உருவாக்கக்கூடிய பணி செய்ய வேண்டும் என விரும்பினர்.
திருவதிகை கோயில் பிரகாரத்திலுள்ள சிவலிங்கத்தை பொது மக்கள் அனைவரும் சிவராத்ரி அன்று தங்கள் கையால் தொட்டு அபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினார்கள். சில முக்கியஸ்தர் களிடம் இது சம்பந்தமாக பேசிய போது, அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்.
2009 சிவராத்திரி முதல் எல்லா சமுதாய மக்களும் தங்கள் கையால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது தொடங்கியது. அதுமுதல் வருடாவருடம் சிவராத்ரி அன்று இது நடைபெற்று வருகிறது. அனைத்து சமுதாய மக்களும் மகிழ்ச்சியுடன் இதைச்செய்து வருகின்றனர்.
வடமாநிலங்களில் தான் சிவனுக்கு அனைவரும் தங்கள் கையால் அபிஷேகம் செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. அதைப் போல தமிழகத்திலும் திருவதிகை கோயிலில் இந்த வழக்கத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறது.
#
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக