சனி, 30 டிசம்பர், 2023

ஒசூரில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட ஸ்ரீ வீரபாகுஜி



1981ல் பெங்களூரில் ஒரு ஆர்.எஸ்.எஸ். பைட்டக் ஒன்று நடைபெற்றது. அந்த பைட்டக்கிறகு கர்நாடகாவிலுள்ள எல்லா தாலுகாவிலிருந்தும் ஸ்வயம்சேவகர்களை அழைத்து வரவேண்டும் என்று முடிவு செய்து எல்லோரும் தீவிரமாக பணியாற்றினார்கள்.

குறிப்பிட்ட தேதியில் பைட்டக் நடக்கும்போது. எல்லா தாலுக்காவிலிருந்தும் ஸ்வயம்சேவகர்கள் வந்து இருக்கிறார்களா என்று பார்க்கும் போது, இரண்டு தாலுக்காவிலிருந்து வரவில்லை என்று தெரிந்தது.

ஒன்று ஒசூர், மற்றொன்று தேன்கனிக்கோட்டை எனப்படும் டெங்கனிக்கோட்டை. அப்போது இந்த இரண்டு பகுதிகளும் முழுமையாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசக்கூடிய பகுதிகளாக இருந்ததால், சங்க கண்ணோட்டத்தில் கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது.

தளி பகுதியைத் தவிர வேறு எங்கும் ஷாகா இல்லை. தற்போது திருச்சி கார்யாலயத்தில் பிரச்சாரக்காக இருக்கும் ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்ரீ சீதாராமன்ஜி தளி பகுதியில் ஷாகா நடத்திக் கொண்டிருந்தார். ஸ்ரீ ஹொ.வே. சேஷாத்ரிஜி, ஸ்ரீ கிருஷ்ணப்பாஜி போன்றவர்கள் தளி பகுதிக்கு அப்போது பிரவாஸ் செய்திருக்கிறார்கள்.

பிறகு அரசாங்க கணக்குப்படி பகுதிகள் பிரிக்கப்பட்ட போது, மேற்கண்ட இரண்டு பகுதிகளும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு ஒசூரில் சங்க பணி துவக்குவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1985ல் ஸ்ரீ. A.செந்தில்குமார்ஜி (தற்போதைய அகில பாரத சேவா பிரமுக்) ஒசூர் தாலுகா பிரச்சாரக் ஆக வந்தார். ஊரில் சில பெரியவர்களும், சில பள்ளி ஆசிரியர்களும் அவரின் தொடர்புக்கு வந்தனர்.

அவர்களில் நான்கு பள்ளி ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். ஸ்ரீ ஜெகனாதன்ஜி, ஸ்ரீ அன்னையப்பாஜி, அத்திமுகம் ஸ்ரீ விஸ்வநாதன்ஜி, ஸ்ரீ சத்தியநாராயணன்ஜி.

செந்தில்ஜி மூலம் சங்கத்தைப் பற்றி அறிந்துக் கொண்ட அவர்களுக்கு சங்கத்தின் முக்கியத்துவம் புரிந்தது. அதன் பிறகு சங்கத்தை எல்லா இடங்களிலும் கொண்டு செல்ல தீவிர முயற்சி எடுத்தனர். ஒசூர் மற்றும் சுற்றுப்புறத்தில் எங்கு சங்க நிகழ்ச்சி, வர்க நடைபெற்றாலும் மாணவர்களை அனுப்பி வைப்பார்கள். இவர்களுக்கு அந்த பகுதிகளில் இருந்த மரியாதை காரணமாக பெற்றோர்களும் தங்கள் மகன்களை விருப்பத்துடன் முகாம், நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் மூலம் ஒசூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் சங்கம் மிக வேகமாக வளர்ந்தது. பல ஊர்களில் ஷாகா துவக்கப்பட்டன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1989ஆம் ஆண்டு நாடு முழுவதும் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரதிஷ்டை செய்வதற்காக ராம சிலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒசூரிலும் அதை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

தமிழகத்தின் திராவிட சிந்தனை, கடவுள் எதிர்ப்பு போன்ற விஷமங்கள் அங்கு நுழையாமல் இருந்த காலக்கட்டம் அது. மக்கள் ஆன்மிக சிந்தனையுடன் இருந்தனர். எல்லா ஊர்களிலும் இருக்கும் ராமர் கோயிலில் வாரந்தோறும் பஜனை நடைபெற்று வந்தன. ராமர் மீது அளவற்ற பக்தியுடன் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஒசூரிலுள்ள ஸ்ரீ நாராயண தாதா ஆஸ்ரமம். அதற்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் பக்தர்கள் உண்டு, அப்போதைய அதன் துறவி ஸ்ரீ வெங்கடேச மாஸ்டர் ஸ்ரீ ராம சிலா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த விரும்பினார். அவருக்கு தொடர்பில் இருந்த கிராமங்களுக்கு ராம சிலா கற்கள் கொடுக்கப்பட்டன.

பூஜிக்கப்பட்ட கற்களை சேகரிக்க நான்கு விதமான ரதங்கள் பாரதத்தில் வலம் வந்தன. ஒசூருக்கு ஜாம்பவான் ரதம் வருகை தந்தது. தமிழகத்திலேயே மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்றால் அது ஒசூரில்தான் என்று சொல்ல வேண்டும். நுற்றுக்கணக்கான டிராக்டரில் பூஜிக்கப்பட்ட கற்களை மக்கள் பயபக்தியோடு கொண்டு வந்து அளித்தனர். அன்று ஒசூர் நகரமே ஸ்தம்பித்து போயின. இவ்வளவு ஆதரவு இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இது சில அரசியல்வாதிகளுக்கு பீதியை உண்டாக்கியது. ஆரம்பத்திலேயே இதை கிள்ளியெறிய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர்.

அதற்கு வாய்ப்பாக அமைந்தது உடனடியாக வந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். அமைதியாக சென்று கொண்டிருந்த ஊர்வலத்தில் சில விஷமிகள் உள்ளே நுழைந்து அருகில் இருந்த மசூதி மீது வெடிகளை வெடித்து கலாட்டா செய்தனர்.

ஏற்கனவே தயாராக காத்துக் கொண்டிருந்த காவல்துறை அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தியது. கலாட்டகளுக்கு சம்பந்தமில்லாத ஸ்ரீ செந்தில் குமார்ஜி கைது செய்யப்பட்டார். கார்யாலயத்திற்குள் புகுந்த காவல்துறையினர் அதனை துவம்சம் செய்தனர்.

இதனைக் கண்டித்து ஒருகண்டனக் கூட்டம் நடத்த வேண்டும் என்று சேலம் விபாக் பிரச்சாரக் ஆக இருந்த ஸ்ரீ வீரபாகுஜி முடிவு செய்தார். அப்போது ஒசூரில் சங்கத்தை தவிர பாரதிய ஜனதா கட்சி மட்டுமே இருந்தது. அதுவும் அப்போதுதான் துளிர் விட்டு இருந்தது. பாஜக பெயரில் கண்டனக் கூட்டத்தை நடத்த ஸ்ரீ வீரபாகுஜி விரும்பினார். மிகவும் கடுமையான முயற்சி எடுத்தார். சுமார் ஒரு மாதம் கழித்து தான் காவல்துறை அனுமதி அளித்தது.

பொதுக் கூட்டத்திற்கு முன், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு அலாவுதீன், எஸ்.பி. திரு காந்திராஜன் ஆகியோர் அரசியல்வாதிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் அழைத்து ஒரு அமைதி கூட்டத்தை கூட்டினர். பாஜக, இந்து இயக்கங்களை அழைக்கவில்லை. கூட்டம் நடைபெற இருக்கிறது என்பதை அறிந்த ஸ்ரீ வீரபாகுஜி அந்த கூட்டத்தில் அழைப்பு இல்லாமலேயே கலந்துக் கொண்டார்.

அமைதிக் கூட்டத்தில் ஆட்சியர் பேசும் போது, ”இந்த ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வெளியூர் நபர்களை அனுமதிக்காதீர்கள். இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் வெளியூர் நபர்கள் உடனே வெளியேற வேண்டும்” என்றார். அதைக் கேட்ட ஸ்ரீ வீரபாகுஜி, “நீங்களும் வெளியூர்காரர்தானே. அப்போது நீங்களும் வெளியேறுங்கள்” என்று காட்டமாக பதில் அளித்தார். அதற்கு ஆட்சியர், “நான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவன். எனக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு” என்றார். உடனடியாக ஸ்ரீ வீரபாகுஜி, “நான் ஆர்.எஸ்.எஸ்ஸால் நியமிக்கப்பட்டவன். இந்துக்களுக்கு பிரச்சனை என்று வந்தால் அதை தட்டி கேட்க எனக்கும் எல்லா அதிகாரமும் இருக்கிறது” என்றார். அதன் பிறகு ஆட்சியர் வாய் திறக்கவில்லை.

கூட்டத்தை ஒசூர் மையத்திலுள்ள போஸ் பஜாரில் நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது. அனுமதி கொடுத்துவிட்டு பல தடைகளையும், தொந்தவுகளையும் கொடுத்தது. கூட்டத்திற்கு அதிக கூட்டம் சேராமல் இருக்க காவல்துறை பல முயற்சிகளை எடுத்தது. கிராமங்களிலிருந்து கூட்டம் வராமல் தடுப்பதற்காக மதியத்திற்கு மேல் நகர பேருந்துக்களை நிறுத்தினர். தேவையில்லாமல் சந்தைப்பகுதியில் தடியடி நடத்தி மக்கள் மனதில் ஒரு பீதியை உண்டாக்கினர்.

கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்த வேலையில், ஒரு கும்பல் கூட்டத்தை கலைக்கும் நோக்கத்தில் ஆவேசமாக வந்தது. அவர்கள் ஸ்ரீ வீரபாகுஜியை சுற்றி நின்று மிகவும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அவர்களது திட்டம் ஸ்ரீ வீரபாகுஜியை மிரட்டி, கூட்டத்தை தடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஸ்ரீ வீரபாகுஜி தன்னுடைய மீசையை முறுக்கி, அவரும் அவர்களுக்கு இணையாக கடுமையாக வாக்குவாதம் செய்தார். அதைக் கண்ட அவர்கள் பயந்து பின்வாங்கினர்.

எல்லா தடைகளையும் மீறி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். பல கிராமங்களிலிருந்து டிராக்டர் எடுத்துக் கொண்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். திரும்பிய பக்கமெங்கும் மக்கள் கூட்டம்தான்.

கண்டனக் கூட்டத்தில் ஸ்ரீ வீரபாகுஜியுடன், ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன், தளி தொகுதி பாஜக வேட்பாளராக பின் அறிவிக்கப்பட்ட ஸ்ரீ ரங்காரெட்டி ஆகியோர் பேசினார்கள். ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்களின் ஆவேசமான பேச்சு மக்களின் மனங்களை கொதிக்க வைத்தது.

மாவட்ட ஆட்சியர் திரு அலாவுதீன், மாவட்ட கண்காணிப்பாளர் திரு. காந்திராஜன் கூட்டத்தின் ஒர் ஓரத்தில் நின்று அனைவருடைய பேச்சுக்களையும், மக்களின் ஆவேசத்தையும் பார்த்து கொண்டிருந்தனர். அவர்களின் கோபம் உச்சக்கட்டத்திற்கு சென்றனர். இந்த எழுச்சியை முளையிலேயே கிள்ளி எறி திட்டமிட்டனர்.

ராம சிலா நிகழ்ச்சிக்கு பிறகு நாடு முழுவதும் ஸ்ரீ ராம ஜோதி யாத்திரை நடைபெற்றது. ஒசூருக்கும் அந்த ரதம் வந்தது. ஒசூரில் அமைதியாக நடைபெற்ற ராம ஜோதி ரதம், தேன்கனிக்கோட்டைக்கு 10.10.1991 அன்று சென்றது. அங்கு ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன்ஜி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தார்.

ஒரு குறிப்பிட்ட தெரு வழியாக ஊர்வலம் செல்லக் கூடாது என்று காவல்துறை தடை விதித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போதே, காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்தனர். அடுத்த சில நொடிகளில் துப்பாக்கி சூடும் நடைபெற்றது.

ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன்ஜி மீது கடுமையாக தடியடி தாக்குதல் நடத்தது. அவர் மண்டையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக ஸ்வயம்சேவகர்கள் அவரை காப்பற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றதால் ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீ பாபு, ஸ்ரீ சங்கர், ஸ்ரீ ராஜா ஆகிய நான்கு அப்பாவி இந்துக்கள் தலை, நெஞ்சு, வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து பலியாகினர். அவர்களுடைய உறவினர்களுக்கு கூட சொல்லாமல் உடலை ஒசூரில் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன்ஜி, அப்போதைய தர்மபுரி ஜில்லா பிரச்சாரக் ஸ்ரீ சுந்தர்ராஜன்ஜி (தற்போது நியூரோ தெரபி மருத்துவர்), ஸ்ரீ ஆறுமுகம் (தற்போது தக்ஷிண் தமிழ்நாடு பிராந்த பிரச்சாரக்) பள்ளி மாணவர் ஸ்ரீ A.N. அசோக் (தற்போது கீரிடா பாரதி க்ஷேத்ர பொறுப்பாளர்) ஸ்ரீ ரங்கநாத் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட சேலத்திலிருந்து ஸ்ரீ வீரபாகுஜி ஓசூர் வந்தார். அவருடன் காலம் சென்ற ஸ்ரீ ரமேஷ்ஜி, K.N. லெட்சுமணன்ஜி, A.K. பழனிசாமிஜி, சிங்கமெத்தை ஸ்ரீ கோபிஜி, ஈரோடு ஸ்ரீ இளங்காந்தி ஆகியோரும் வந்தனர். சென்னையிலிருந்து ஸ்ரீ வேதாந்தம்ஜி, ஸ்ரீ மெய்யப்பன்ஜி ஆகியோரும் வந்தனர். தேன்கனிக்கோட்டையிலிருந்து ஸ்ரீ முரளி வந்திருந்தார். இவர்களுடன் முதல்நாள்தான் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஸ்ரீ செந்தில்குமார்ஜி, ஒசூர் K.S. நரேந்திரன்ஜி மற்றும் பலர், ஒசூரில் முகாமிட்டு இருந்த ஆட்சியரை பார்க்க சென்றனர்.

நீண்ட நேரம் காத்திருந்தும் மாவட்ட ஆட்சியர் இவர்களைப் பார்க்க அழைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ஸ்ரீ வீரபாகுஜி இன்னும் சற்று நேரத்தில் எங்களை பார்க்க அழைக்கவில்லையென்றால், வெளியேறி விடுவோம் என்று ஆவேசமாக கூறினார். சற்று நேரத்தில் சில காவல்துறை அதிகாரிகள் வந்து ”பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தாக நீங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டீர்கள்” என்று கூறி கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊரிலும், தொழில் ரீதியாகவும் மிகவும் முக்கியமானவர்கள். இந்த கலவரத்தில் சம்பந்தம் இல்லாதவர்கள். ஆனால் ஓசூரில் இதைப் போன்ற ஒரு துக்கக்கரமான சம்பவம் நடந்து விட்டதே என்ற சோகத்தில் அவர்கள் ஆட்சியரிடம் நீதி கேட்க சென்றனர். அது பொது அமைதிக்கு பங்கம் என்று காவல்துறை பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைத்தது.

அவர்களுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்க காவல்துறை விடவில்லை. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, சுமார் 22 நாட்கள் கழித்து விழுப்புரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் கிடைத்தது. விழுப்புரத்தில் சுமார் 23 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் தளர்த்தப்பட்டது.

இது ஒசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் இந்து எழுச்சி ஏற்பட காரணமாக அமைந்தது. பிறகு நடந்த தளி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதற்கு சூத்திரதாரியாக இருந்து செயல்பட்டவர் ஸ்ரீ வீரபாகுஜி.

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ததின் மூலம் அயோத்தி போராட்டத்திற்கு வழிகாட்டிய ஸ்ரீ வீரபாகுஜி, ஒசூரில் ராம கார்யம் மூலமாக இந்து எழுச்சிக்கு வித்திட்டார் என்றால் அது மிகையாகாது.

  • (1988 ஆண்டியிலிருந்து 1992 ஆண்டு வரை நான் ஒசூரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்தேன். அப்போது நான் பார்த்த, கேட்ட சம்பவங்களின் தொகுப்பு இது).


#

வியாழன், 21 டிசம்பர், 2023

ஸ்ரீ ஜோதிஜி – முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்



சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த திரு சுந்தரம் திருமதி உண்ணாமலை தம்பதிகளுக்கு பிறந்த ஒரே மகன் திரு சுந்தர. ஜோதி 1955ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் பிறந்தார்.

அப்போது வட சென்னை பட்டாளம் பகுதியில் ஷாகா நன்கு நடைபெற்று வந்தது. திரு சுந்தரம் அவர்கள் புளியந்தோப்பு ஷாகாவின் ஸ்வயம்சேவக். அவர் ஷாகா செல்லும் போது, தனது மகன் திரு ஜோதியையும் அழைத்து செல்வார். திரு ஜோதிஜி பால முதல் ஸ்வயம்சேவக்.

திரு சுந்தரம் B&C மில்லில் பணியாற்றினார். 1948 சங்க தடையை எதிர்த்து சத்யகிரகம் செய்து சிறை சென்றிருக்கிறார்.

ஜோதிஜி PUC படிப்பை முடிந்தவுடன் வடசென்னையில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு ப்ரதம வர்ஷ சங்க சிக்ஷா வர்கவை திருப்பராய்துரையில் முடித்தார். 1978ஆம் ஆண்டு தன்னுடைய வேலை ராஜினாமா செய்துவிட்டு சேலத்தில் நடைபெற்ற த்வீதிய வர்ஷ சங்க சிக்ஷா வர்கவில் கலந்துக் கொண்டார். வர்க முடிந்த பின் சங்க பிரச்சாரக் ஆனார். 1980ல் மூன்றாம் ஆண்டு வர்க முடித்தார்.

ஸ்ரீ ஜோதிஜி பிரச்சாரக் பயணத்தில் 1978ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகர் பிரச்சாரக். 1980 ஆண்டு வேலூர் தாலுகா பிரச்சாரக். 1981ல் வேலூர் ஜில்லா பிரச்சாரக். 84ல் திருவண்ணாமலை ஜில்லா பிரச்சாரக். 87ல் வேலூர் சஹவிபாக் பிரச்சாரக். 1989ல் ராமேஸ்வரம் விபாக் பிரச்சாரக். 1995 முதல் விஜயபாதம் ஆசிரியர்.

உடல் நிலை சரியில்லாத காரணத்திற்காக 2010 முதல் விஜயபாரதம் மேலாளராக இருந்தார். 2016முதல் சென்னை சஹ கார்யாலய பிரமுக்காக இருந்தார். உடல் நிலை இன்னும் மோசம் அடைந்த பின் 2020 முதல் அவர் எவ்வித பொறுப்பும் இல்லாத பிரச்சாரக்காக கார்யாலயத்தில் இருந்தார்.

திருவண்ணாமலையில் 1986ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் பிராந்த ஷிபிர் நடைபெற்றது. அதில் சர்சங்கசாலக் ப.பூ. தேவரஸ் ஜி கலந்து கொண்டார். அந்த ஷிபிர் ஏற்பாடுகளை எல்லாம் செம்மையாக கவனித்தார். ஷிபிரில் புதிய பாடல் போட்டி நடைபெறும் என்று அறிவிப்பு இருந்தது. அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் அவர் ஒரு புதிய பாடலை தயாரித்தார். அதற்கு அவரே மெட்டு போட்டு நிகழ்ச்சியில் பாடினார். அந்த பாடல், ‘ஹிந்து என்ற மந்திரம் சங்கம் ஒன்றே தந்திரம், வாய்மையே வெல்லும்’. இந்த பாடல் ஷிபிரில் இரண்டாவதாக வந்தது.

அவர் பிரச்சாரக்காக இருக்கும் போது, ஒரு முறை அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து அவரது உடல் மிகவும் பாதித்தது. இதை கேள்விப்பட்ட அவரது தாயார் மிகவும் வருந்தினார். வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து உடல்நிலையை சரி செய்து பிறகு போகட்டுமே என்று அவர் தன்னுடைய கணவரிடம் வற்புறுத்தினார். அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க சங்க அதிகாரிகளிடம் பேசி, அவர் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார். வீட்டிற்கு வந்த சில நாட்களில் அவர் உடல் நிலை சீரானது. ஆனால் அவர் தாயார் இன்னும் சில நாட்கள் வீட்டில் தங்கியிருக்க கட்டாயப்படுத்தினார். அவரது தந்தையார் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மேலும் சில நாட்கள் ஆகியும் ஜோதிஜியை அனுப்புவதற்கு அவரது தாயார் தயாராகயில்லை. இதை கண்ட ஜோதிஜியின் தந்தை கார்யாலயத்திற்கு வந்து, சங்கம் அதிகாரிகளிடம் ’சீக்கிரம் ஜோதிஜியை பிரச்சாரக் ஆக மீண்டும் அழைத்து செல்லுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி சங்க அதிகாரிகள் ஜோதிஜியிடம் பேசினார்கள். ஒரு நாள் ஜோதிஜி வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தன்னுடையை கார்ய க்ஷேத்திரத்திற்கு சென்று விட்டார்.

அவர் ஸ்ரீ வீரபாகுஜியுடன் 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து வேலூர் விபாக்கில் பல நிகழ்ச்சிகளையும், பல சாகஷங்களையும் நடத்தியுள்ளனர். அப்போது வேலூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம் மிகவும் பேசு பொருளாக இருந்தது.

வேலூருக்கு இருந்த அவப் பெயரை நீக்க வேண்டும் என்பதற்காக மறைந்த ஸ்ரீ வீரபாகுஜியுடன் இணைந்து கடும் முயற்சி எடுத்தார். அதன் பயனாக 1981ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போது அயோத்தி ஸ்ரீ ராம விக்கிரம் பிரதிஷ்டைக்கு அது முன்னோடியாக அமைந்தது.

அவர் விஜயபாரதம் ஆசிரியராக இருக்கும் போது, கடுமையாக உழைப்பார். தினசரி மாலையில் வெளியில் சென்று எழுத்தாளர்களை சந்திப்பார். அன்று வந்த எல்லா ஆங்கில பத்திரிகைகளையெல்லாம் படித்து, அடுத்த வாரம் எதை பற்றி கட்டுரை வர வேண்டும் என்று குறிப்பு எடுத்து கொள்வார். தினசரி அவர் தூங்கும் போது இரவு 12 மணி, ஒரு மணி ஆகும்.

பல இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கினார். இதழியல் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

திரு ஜோதிஜி பல முக்ய நிகழ்வுகளையும் தன்னுடைய நாட்குறிப்பில் பதிவு செய்து வந்தார். அதில் தன்னுடைய குடும்பத்தில் நடந்த நல்லது, கெட்டது போன்ற விஷயங்களையும் பதிவு செய்துள்ளார். அதில் அவர் பட்டாளம் ஷாகாவில் முக்ய சிக்ஷக்காக இருக்கும் போது இருந்த ஸ்வயம்சேவகர்களின் பெயர்களையும் எழுதியுள்ளார். அவர் பிரச்சாரக் வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்களை தொகுத்து இருக்கிறார்.

அவரது (10.12.2023) அகால மரணம் நம் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அன்னாரின் ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

#  

சிவராம்ஜி செதுக்கிய சிலை ஸ்ரீ வேதகிரிஜி

சங்கம் மற்றும் சேவாபாரதி கார்யகர்த்தர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஸ்ரீ வேதகிரிஜி 2023ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

1980 முதல் அவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். ஸ்ரீ சிவராம்ஜியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவரை வழிகாட்டியாக கொண்டு தன்னுடைய சங்க பயணத்தைத் தொடர்ந்தவர். நான் சில ஆண்டுகள் அவருடன் பணியாற்றியவன் என்ற முறையில் எனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தொடக்கம் முதல் சேவை பணிகளை அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். மாநகர் சேவா பிரமுக் ஆகவும் பணியாற்றியவர். 1999ஆம் ஆண்டு சேவாபாரதி தமிழ்நாடு அறக்கட்டளை துவங்கப்பட்ட போது, அதில் இரண்டு பேர் நிறுவன அறங்காவலர்கள் இருந்தனர். ஒருவர் திரு. சுந்தர.லட்சுமணன், மற்றொருவர் திரு. வேதகிரி. அதுமுதல் மறையும் வரை அவர் சேவாபாரதி பொறுப்பில் இருந்து சேவை பணியாற்றி, பலருக்கு முன் உதாரணமாக இருந்தவர்.

மறைந்த திரு டி.வி. ராஜகோபால்ஜியுடன் இணைந்து சென்னையில் பெரியவர்களை சம்பர்க்க செய்வார். அவர்களிடம் சேவாபாரதி சார்பாக நடைபெறும் சேவை பணிகளை எடுத்துரைத்து, அதில் அவர்களையும் கலந்து கொள்ள சொல்வார். தமிழ்நாடு முழுவதும் சேவைப் பணிகளுக்கு தேவையான நிதிகளை அதன் மூலம் சேகரித்து விடுவார்.

ஸ்ரீ வேதகிரியிடம் உள்ள இரு ஈர்ப்பு என்னவென்றால், அவர் ஒரு நபரை ஒரு முறை சந்தித்தார் என்றால், அவருடைய நட்பு வட்டரத்தில் அவர் வந்துவிடுவார். கடைசிவரை இருவருக்குள்ளும் ஆத்மர்த்தமான நட்பு இருந்துக் கொண்டே இருக்கும். அதுமட்டுமட்டுமல்ல அவரை ஏதாவது ஒரு பணியிலும் ஈடுபடுத்தி விடுவார்.

ஸ்ரீ வேதகிரிஜி பெரியவர்களிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு சாதாரண கார்யகர்த்தர் மீதும் கவனம் செலுத்தினார். அவர்கள் செய்த விஷயங்களையும் குறிப்பிட்டு பாராட்டுவார். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்று தெரியவந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய பெரும் முயற்சி எடுப்பார். அவர் யாரிடமும் கடிந்து பேச மாட்டார். ஸ்ரீ வேதகிரிஜியிடம் தொடர்பிக்கு வந்தவர்கள் அவரை வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்கள்.

சேவாபாரதி நடமாடும் மருத்துவ ஊர்திகளை துவங்கிய போது, அதற்கு தேவையான அரசு அனுமதிகளை பெற தீவிரமாக முயற்சி செய்தவர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி பகுதிகளில் மதமாற்றம் செய்ய கிறிஸ்தவர்கள் மிகவும் தீவிரமாக முயற்சி செய்வதை அறிந்த அவர், அதை தடுக்க பல இடங்களில் இலவச டியூஷன் வகுப்புகள், பண்பாட்டு வகுப்புகள் ஆரம்பிக்க மிகவும் முயற்சி செய்தார். இதற்காக குன்றியிருந்த தன் உடல்நிலை பொறுப்படுத்தாமல். பேருந்தில் பயணன் செய்வார். சேவாபாரதி காரை பயன்படுத்துங்கள்ஜி என்று சொல்லியும் கேட்க மாட்டார். அர்த ராத்திரியில் அவர் சுற்றுப்பயணத்தை முடிந்துவிட்டு வீடு திரும்புவார். அதை கேட்கும் போது மனம் மிகவும் கனமாக இருக்கும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சேவாபாரதி வளர அடித்தளமாக இருந்தார். அவர் பல இடங்களில் ஆசிரியைகளைக் கண்டுபித்து, டியூஷன் வகுப்புகளை ஆரம்பித்தார்.

கொரோனா காலகட்டத்தில் பல இளைஞர்கள் பயந்து வீட்டில் ஓடிங்கியிருந்த போது, 70 வயது நிரம்பிய இவர் பலர் நிவாரணப் பணிகளில் பங்குகொண்டார். அவர் வசிக்கும் பகுதியில் மட்டுமல்ல, திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பயணித்து நிகழ்ச்சி கலந்து கொள்வார். கார்யகர்த்தர்கள் செய்யும் பணிகளை பைட்டக்கில் நடத்தில் ஆய்வு செய்வார். நீங்கள் வீட்டில பாதுகாப்பாக இருங்கள் என்று பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. சேவை செய்வதில் அவருக்கு ஒரு அலாதியான விருப்பம்.

ஸ்ரீ வேதகிரிஜிக்கு ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்வர். சேவாபாரதியில் அவர் தயாரித்த திட்ட அறிக்கை, பிரசுரங்களில் அவருடைய ஆங்கிலப் புலமை மிளிரும். அதுமட்டுமல்ல தமிழிலும் அவர் புலமை மிக்கவர்.

நமக்கு யாராவது வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பினால், அதை ஏற்று கொண்டவிதமாக கை கும்பிடுவது போன்ற சின்னங்கள் மூலம் நாம் பதிலளிப்போம். அவர் அதற்கு அருமையான வாசகத்தை குறிப்பிட்டு அவரின் சேவையை பாராட்டுவார்.

அவரிடம் பல விஷயங்களைப் பற்றி பேசும் போது, எனக்கு இது ஸ்ரீ சிவராம்ஜி கற்றுக் கொடுத்த பாடம் என்று குறிப்பிடுவார். ஸ்ரீ சிவராம்ஜியின் ஒரு அணுக்க தொண்டராக அவர் வாழ்த்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூரில் நடைபெற்ற அவரது பீமரதசாந்தி விழாவில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டு, அவரின் ஆசிகளை பெற்றதை, பெறும் பாக்கியமாக கருதுகிறேன்.

அவர் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக நான் கருதுகிறேன். பிறர்க்கென வாழ்பவர்களே வாழ்பவர்கள், மற்றவர்கள் நடைபிணத்திற்குச் சமமானவர்கள் என்ற சுவாமி விவேகானந்தரின் அறைகூவலுக்கு உதாரணமாக அவர் வாழ்த்துள்ளார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கார்யகர்த்தர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

#


இந்து அனைவரும் சகோதரர்கள் என்று உணர்த்திய ஆர்.எஸ்.எஸ்.

பாரதத்தின் வட பகுதிகளில் திருமணத்தின் போது மணமகன் குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக வருவது இந்துக்களின் ஒரு பிரிவினரின் பழக்கம். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தாங்களும் அவ்வாறு செய்ய விரும்பினர். இது பிடிக்காத சிலர், அதை கடுமையாக எதிர்த்தனர். பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

ராஜஸ்தான் மாநிலம், தெளசா மாவட்டத்தில் உள்ள மட்லானா கிராம ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் இதற்கு முற்றுபுள்ளி வைக்க விரும்பினார்கள். இந்த ஊரில் ஷாகா ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் நாள் அந்த கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணம் நடைபெற இருந்தது. அதையொட்டி மணமகன் குதிரை சவாரி செய்யும் நிகழ்ச்சியை ஊர் பெரியவர்களின் நல்லாசியுடன் நடத்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் விரும்பினார்கள்.

ஸ்வயம்சேவகர்கள் எல்லா ஜாதி தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசி அவர்களின் ஆதரவை பெற்றனர். குறிப்பிட்ட தேதியில் மணமகன் குதிரை சவாரி செய்யும் நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து கூறினார்கள். இது அந்த ஊரில் மட்டுமல்லாமல், பக்கத்து பல ஊர்களிலும் பேசும் பொருள் ஆகியது.

அதற்கு பிறகு அந்த கிராமத்தில் குதிரை சவாரி விஷயத்தில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டதில்லை. இந்துக்கள் அனைவரும் சகோதரர்கள்; இந்துக்கள் எவரும் தாழ்ந்தவர் அல்ல என்று நிரூபித்தனர் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள்.

#  



பட்டியல் சமுதாய மக்களை கோயிலுக்குள் அழைத்து வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ்.


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கே.வேலூர் கிராமம். பட்டியல் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் மத்தியில் ஸ்ரீ ஆதிகேவசப் பெருமாள் கோயில் உள்ளது. சில கிராமங்களைப் போல இந்த ஊரியிலும் பட்டியல் சமுதாய மக்கள் இந்த கோயிலுக்குள் நுழைய முடியாது. இதுதான் 2005ஆம் ஆண்டு வரை இருந்த நிலைமை.

2006ஆம் ஆண்டு இந்த நிலைமை மாறிவிட்டது. காரணம் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் பணி.

அப்போதைய வேலூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளராக இருந்தவர் திரு தேவநாதன். ராணிப்பேட்டையை மையமாக வைத்து, அவர் வேலூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆர்.எஸ்.எஸ் ஷாகா ஆரம்பிப்பது வலுப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருந்தார்.

அவருடைய மாமனார் ஊர் கே.வேலூர். அங்கு திரு தேவநாதன் முயற்சியால் ஒரு ஷாகா ஆரம்பிக்கப்பட்டது. திரு தேவநாதன் தன்னுடைய மாமனார் திரு ரங்கநாதச்சாரியாரிடம் ஆர்.எஸ்.எஸ்., இந்து ஒற்றுமை, மதமாற்றம், தீண்டாமை குறித்து பேசுவார். அவர் மனதில் இந்து ஒற்றுமை, சமுதாய நல்லிணக்கம் விதையை விதைத்தார்.

திரு ரங்கநாதாச்சாரியார் பள்ளி ஆசிரியர். அவர் பல கிராமங்களில் ஆசிரியராகப் பணியாற்றி நல்ல பேரை எடுத்தவர். அத்துடன் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். சமுதாய நல்லிணக்கம் விதை அவரது மனதில் விளைய ஆரம்பித்தது.

திரு. ரங்கநாதாச்சாரியார் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் அந்த ஊரில் பழையடைந்து இருந்த ஸ்ரீ ஆதிசேகவப் பெருமாள் கோவிலை புணர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் நடத்த விரும்பினார் அதற்காக தன் வயதையும் பொருட்படுத்தாமல் பலரிடம் சென்று நிதி சேகரித்தார். பராமரிப்பு பணிகளையும் தானே நேரில் கவனித்தார்.

கும்பாபிஷேகத்திற்கு தேதி மற்றும் மற்ற விஷயங்களைப் பற்றி ஆலோசிக்க ஊர் முக்கியஸ்தர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை எப்படி நடத்துவது என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்தார்கள்.

திரு ரங்கநாதச்சாரியார் முறை வந்ததும். அவர் குறிப்பிட்டார். “கும்பாபிஷேகத்தை இந்த ஊரில் உள்ள அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும்” என்றார். அந்த கூடியிருந்த அந்த முக்கியஸ்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'நாம் எல்லோரும் சேர்ந்துதானே இது நடத்தப் போகிறோம் நீங்க என்ன சொல்ல வரீங்க' என்று கேள்விக்குறியுடன் அவரை பார்த்தனர்.

அப்போது அவர் விவரமாக பேசினார். “இந்தக் கோவிலுக்குள் இதுநாள் வரை பட்டியல் சமுதாய மக்கள் நுழைந்ததில்லை. இனி அவர்களையும் இந்த கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். இந்த கோவில் கும்பாபிஷேகப் பணியிலும் அவர்களது பங்கும் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. வேறு யாராவது இக்கருத்தைக் கூறியிருந்தால் அங்கு என்ன ஆயிருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த கருத்தைச் சொன்னவர் அந்த ஊரில் மட்டுமல்ல, பக்கத்து பல கிராம மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர்; ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவரின் இந்த கோரிக்கை ஊர் முக்கியஸ்தர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

ஆனாலும் திரு. ரங்கநாதாச்சாரியார் தொடர்ந்து தன் கோரிக்கைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்தார். கடைசியில் ஊர் முக்கியஸ்தர்கள் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

இந்த விஷயத்தை பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டாச்சாரியாரே நேரில் சென்று தெரிவித்தார். அவர்களுக்கும் ஒரே ஆச்சரியம். நாட்டில் எந்த மாற்றம் வந்தாலும் அது இந்த கிராமத்தில் எட்டாக கனியாக இருக்கும் என்று எண்ணியவர்கள், தற்போது எட்டும்கனியாகி விட்டது உணர்ந்து உற்சாகம் ஆகினர்.

கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி விரதம் இருந்து. நெற்றியில் திருமண இட்டு பயபக்தியோடு கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்டனர்.

அந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பட்டாச்சாரியாரின் மகன் திரு முகுந்தன் கூறுகிறார்.  “இந்த கிராமத்தில் பட்டியல் சமுதாய மக்கள் காலடி படாத பகுதி எதுவுமே இல்லை - இந்த கோவிலை தவிர. இந்த கோவிலுக்குள் அவர்கள் நுழைந்ததே இல்லை. நீங்களும் கோவிலுக்கு வரலாம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு ஒரே சந்தோஷம். அவர்களிடம் இருந்த சந்தோஷத்தில் கோவிலுக்குள் நுழைந்தவுடன் இங்க இன்ன சாமி இருக்கு அங்க என்ன இருக்கு என்று அங்கும் இங்கும் ஒடியதைப் பார்த்தது என் கண்முன்னே நிற்கிறது. அவர்களுக்கு இத்தனை நாள் தீங்கு விளைத்து விட்டோம் என்பதை உணர்ந்தேன்.”

பட்டாச்சாரியாரின் உபதேசங்கள் ஊருக்கு மட்டுமல்ல. தன் சொந்த வீட்டிலும் கடைப்பிடித்தார். நாங்கள் கோவிலுக்கு சென்று ஊர் மக்களிடம் கலந்து உரையாடிவிட்டு பட்டாச்சாரியாரின் வீட்டுக்கு வந்து இரவு உணவு சாப்பிடோம். அப்போது பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் எங்களுடன் உணவு உண்டனர்.

நகரத்தில் ஜாதி வேற்றுமைகள் அவ்வளவாக பார்ப்பதில்லை. ஆனால் கிராமத்தில் அது ரத்தத்தில் ஊரிய விஷ(ய)ம். ஆனால் ஊரில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டது என்றால் அதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.

  • (2006ஆம் ஆண்டு ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழாவை யொட்டி அகில பாரத அளவில் சமுதாய நல்லிணக்க மலர் ஒன்று இந்தியில் வெளியிடப்பட்டது. அதில் வட தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சம்பவங்கள் பிரசுரம் ஆகியது. அதில் ஒன்று இந்த கே.வேலூர். மற்றொன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகிலுள்ள ஜோதிஹள்ளி கிராமம்).
#

நரிக்குறவர்களுக்கும் பந்தி சாப்பாடு – ஆர்.எஸ்.எஸ். தலைவர் சாதனை

கரூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்தவர் திரு என்.ஆர்.சுப்பிரமணியன் அய்யர். கரூரில் பிரபலமான ஓட்டலுக்கு சொந்தக்காரர்.

அவரது மகள் திருமணம் 1988இல் நடைபெற்றது. ஊரில் உள்ள எல்லா பெரியவர்களும் திருமணத்திற்கு வந்து மணமக்களை ஆசீர்வதித்து விட்டு, உணவு அருந்திச் சென்றனர்.

திருமண வீட்டின் பின்புறமாக தற்செயலாக வந்த அவர், அங்கு நடந்த ஒரு காட்சியை கண்டு ஒரு கணம் அதிர்ச்சி அடைந்தார். அங்கு நரிக்குறவர் சமுதாய மக்கள் திருமண வீட்டில் இருந்து எறிந்த எச்சில் இலையில் இருந்த மிச்சமீதி உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களைத் திருமண வீட்டிலிருந்து சிலர் விரட்டியடித்த காட்சி தான் அது.

திருமணத்துக்கு வந்த எல்லோரும் நல்ல உணவு சாப்பிட்டு செல்லும்போது நரிக்குறவர்கள் சாப்பிட முடியாமல் சிலர் தடுத்தது, அவரின் மனதை கலங்க வைத்தது. உடனே வீட்டுக்குள் வந்து அவர் மணமக்கள் உள்பட அங்கிருந்த உற்றார், உறவினர்களை அழைத்து, வீட்டுக்கு வெளியே, தான் கண்ட காட்சியை கூறி, அவர்களை அழைத்து சாப்பிட வைக்க வேண்டும் என்று பேசினார். அதற்கு உறவினர்களில் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களும் நம்மைப் போல மனிதர்கள்தானே? ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்த நாமே அவர்களை இப்படி புறக்கணிக்கலாமா? நாம்தானே சரி செய்ய வேண்டும் என்பதை கூறி அவர்களுக்கு புரியவைத்தார்.

பிறகு மணமக்களுடன் வீட்டுக்கு பின்புறம் சென்று அங்கு எச்சில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை நெருங்கினார். எல்லோரும் கூட்டமாக தங்களை நோக்கி வருவதை பார்த்த அவர்கள் அச்சமடைந்து அங்கிருந்து நகரத் தொடங்கினர்.

பீதியுடன் செல்லத் தொடங்கிய அவர்களை மணமக்கள் அருகில் சென்று வீட்டுக்குள் வந்து பந்தியில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்லும்படி அழைத்தனர். இந்த அழைப்பை முதலில் நம்ப முடியாமல் அவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் மணமக்கள் விடாது அழைத்ததால் அவர்கள் வீட்டுக்குள் வந்து பந்தியில் அமர்ந்து எல்லோரையும் போல உணவு சாப்பிட்டுவிட்டு மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

ஆனால் இது பிடிக்காத அங்கு எச்சில் இலை எடுத்துக் கொண்டிருந்த பெண்கள் அவர்கள் சாப்பிட்ட இலைகளை நாங்கள் எடுக்க மாட்டோம்; அவர்களையே எடுக்க சொல்லுங்கள் என்று பிடிவாதம் பிடித்தனர். உடனடியாக திரு என்.ஆர். சுப்பிரமணியன் தானே இறங்கி அவர்களது எச்சில் இலைகளை எடுக்க ஆரம்பித்தார். அதைக் கண்டு பீதி அடைந்த இலை எடுக்கும் பெண்கள் அவர்களது இலையையும் எடுக்க ஆரம்பித்தனர்.

கரூரில் பிரபலமான திரு என்.ஆர்.சுப்பிரமணியன் ஆர்.எஸ்.எஸ்ஸின் கரூர் மாவட்ட தலைவராக இருந்தார். இதுவே அவரை சமரஸதா மனப்பான்மையுடன் சிந்திக்க வைத்தது. அவரது இல்லத் திருமணத்தில் ஒரு புரட்சியே நடத்தி விட்டார்.

#  

தீண்டாமையை வேரறுத்து சாதனை படைத்த ஆர்.எஸ்.எஸ்.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பி. செட்டிஹள்ளி பஞ்சாயத்து. 1980 வரை இந்த பஞ்சாயத்திலுள்ள கிராமங்களில் மற்ற பகுதிகளைப் போல தீண்டாமை தலைவிரித்து ஆடியது. பட்டியல் சமுதாய மக்கள், ஊருக்குள் செல்லும்போது செருப்பைக் கழற்றி கையில் எடுத்து செல்ல வேண்டும்; துண்டை இடுப்பில் கட்டிக் கொள்ள வேண்டும்; தேநீர் கடைகளில் அவர்களுக்கு தனி டம்ளர்; கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட முடியாத நிலைதான் இருந்தது.

1980 வாக்கில் பி.செட்டிஹள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஜோகிப்பட்டியில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா ஆரம்பிக்கப்பட்டது. அதுவே அந்த பஞ்சாயத்தில் பெரிய கிராமம். திரு. ராமகிருஷ்ணன்ஜி என்ற பிரச்சாரக் அந்த ஊர் இளைஞர்களுக்கு R.S.S. பயிற்சிகளை கற்றுக் கொடுத்தார். அத்துடன் சமுதாய பிரச்னைகளையும் சரி செய்ய அவர்களுடன் விவாதித்தார்.

ஹிந்து சமுதாயத்தின் ஓர் அங்கமான பட்டியல் சமுதாயத்தினர் நிலை, அவர்களுக் கு இழைக்கப்படும் அநீதிகள் குறித்து சிந்திக்க வைத்தார். அதைக் களைய வேண்டிய அவசியத்தை அவர்களிடம் எடுத்துரைத்தார்.

காலங்காலமாக தீண்டாமையை கடைப்பிடித்து வந்த அந்த கிராம இளைஞர்களுக்கு ராமகிருஷ்ணன் கூறிய கருத்துக்கள் சிந்திக்க வைத்தன. இனி கிராமத்தில் தீண்டாமை கடைப்பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என இளைஞர் குழு முடிவெடுத்தது.

ஊருக்குள் வரும் பட்டியல் இன சகோதரர்களிடம் கால்களிலிருந்து செருப்புகளை கழற்ற வேண்டாம்; துண்டுகளை இடுப்பில் கட்ட அவசியம் இல்லை; தேநீர்க் கடைகளில் இரட்டை டம்ளர் முறை கூடாது என்று இளைஞர் குழு எடுத்துக்கூறியது.

அதைக் கண்ட ஊர் பெரியவர்கள் இளைஞர்களுடன் சண்டை போட்டனர். ஊர்ப் பஞ்சாயத்து கூடி அவர்களுக்கு அபராதம் விதித்தனர். ஆனால் ஸ்வயம்சேவகர்கள் அபராதத்தைக் கட்ட மறுத்தனர். பிரச்னை பெரிதாகியது. இளைஞர்கள் தங்கள் எடுத்த முடிவில் தீவிரமாக இருந்தனர்.

இந்த விஷயத்தைப் பற்றி திரு. சண்முகம் என்பவர் கூறும் போது, “எங்களுடைய செயல்கள் ஊர் பெரியவர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தின. எங்களுக்கு அபராதம் கூட விதித்தனர். கட்ட மறுத்து விட்டோம். பட்டியல் சமுதாய மக்களுக்காக எந்த வித தியாகமும் செய்யத் தயாராக இருந்தோம். பட்டியல் சமுதாய மக்களை தள்ளி வைப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மனக்கஷ்டங்களையும், எதிர்காலத்தில் விளையும் சமுதாய பிரச்சனைகளையும் எடுத்துரைத்தோம். கடைசியில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைத்தது. கிராமத்து பெரியவர்களும் இனி தீண்டாமையை கடைப்பிடிப்ப தில்லை என முடிவு எடுத்தனர்” என்றார்.

கிராமப் பஞ்சாயத்து நடைபெறும் சமயத்தில் பட்டியல் சமுதாய மக்கள் உட்கார முடியாது. அவர்களையும் உட்கார சொல்லி அவர்களின் கருத்துக்களையும் கேட்க ஆரம்பித்தனர். இன்று அந்த ஊரில் பட்டியல் சமுதாயத்தினர் பொருளாதார ரீதியிலும் வளர்ந்துள்ளனர்.

ஜோகிப்பட்டியில் ஏற்றப்பட்ட ஜோதி பக்கத்து கிராமங்களுக்கும் பரவியது. பி.செட்டிஹள்ளி சுற்றியிருந்த பல கிராமங்களில் அப்போது ஆர்.எஸ்.எஸ். ஷாகா நடைபெற்றுக் கொண்டிருந்தது. சுமார் 200 பேர் பயிற்சி பெற்றிருந்தனர். அவர்களும் தங்கள் கிராமத்தில் தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டனர். அதன் மூலம் பல கிராமங்களில் தீண்டாமை ஒழிந்தது.

இரண்டு சமூகத்தினரும் தனித்தனியாக நடத்திக் கொண்டிருந்த சாக்கியம்மன் கோவில் திருவிழா ஒன்றாக நடைபெற ஆரம்பித்தது. சாக்கியம்மன் கோயில் திருவிழாவில் ஆண் கரகம், பெண் கரகம் ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை ஊர்க்காரர்களிடம் இருந்த இரண்டு கரகத்தில், பெண் கரகத்தை பட்டியல் சமுதாயத்தினரிடம் அளித்து, அவர்களுக்கும் முக்கியத்துவம் அளித்தனர். இது ஊர் ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைந்தது.

2006ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு சந்திரசேகர் இந்த பி.செட்டிஹள்ளி பஞ்சாயத்தை  ‘தீண்டாமையைக் கடைப்பிடிக்காத நல்லிணக்க பஞ்சாயத்து’ என்று அறிவித்து விருது வழங்கினார். அதை அன்றைய பஞ்சாயத்து தலைவர் திரு. முத்துராஜ் பெற்றுக் கொண்டார். இவர் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றவர். ஆர்.எஸ்.எஸ். முகாம் முடித்தவர்.

விருது வாங்கிய பிறகு பத்திரிகையாளர் சந்திப்பில் திரு முத்துராஜ் பேசும் போது,  “இந்த மாற்றத்திற்குக் காரணம் ஆர்.எஸ்.எஸ்” என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் விதைத்த விதை இன்று ஆலமரமாக விரிந்து பரந்துள்ளது.

#  

டாக்டர் அம்பேத்கர் துயரை துடைத்த ஆர்.எஸ்.எஸ்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது காலாராம் ராம் மந்திர். இந்தக் கோயிலில் வழிபட பட்டியல் சமுதாயத்தினருக்கு அனுமதி இல்லாத காலமிருந்தது.  1930இல் டாக்டர் அம்பேத்கர் சுமார் 8,000 பேருடன் சென்று கோயில் உள்ளே சென்று வழிபட போராட்டம் நடத்தினார். ஆனால் கோயில் பூஜாரிகளும், நிர்வாகிகளும் அனுமதிக்கவில்லை. தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. ஆனாலும் அனுமதி கிடைக்கவில்லை. டாக்டர் அம்பேத்கர் மனதில் வருத்தத்தை ஏற்படுத்திய சம்பவங்களில் இதுவும் ஒன்று.

பிறகு அந்த ஊரில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா ஆரம்பிக்கப்பட்டது. அந்த ஊர் ஸ்வயம்சேவகர்கள் டாக்டர் அம்பேத்கருக்கு 1930இல் ஏற்பட்ட வருத்தத்தை சரி செய்ய விரும்பினார்கள். ஸ்வயம்சேவகர்கள் எல்லோரும் இணைந்து கோயில் நிர்வாகிகளையும், பூஜாரிகளையும் கலந்து பேசினர். எல்லாம் இறை அம்சம் என்கின்ற போது பட்டியல் சமுதாயத்தை ஒதுக்கி வைத்தல் எப்படி நியாயம் என்று பேசினர். அவர்களும் தங்கள் முன்னோர்கள் செய்ய தவறுக்கு வருந்தி அவர்களை கோயிலுக்குள் அழைக்க வேண்டினர்.

ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் டாக்டர் அம்பேத்கர் வாரிசுகளையும் சென்று சந்தித்தனர். அவர்கள் மீண்டும் கோயிலுக்கு வரவேண்டும் எனவும் அவர்களுக்கு பூரண மரியாதை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

அதை ஏற்றுக் கொண்டு அவர்களும் 2005 ஆம் ஆண்டு கோயிலுக்கு நுழைந்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகமும், பூஜாரிகளும் முழு மரியாதை அளித்து கோயிலுக்கு அழைத்து சென்றனர். அத்துடன் தங்கள் முன்னோர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரினர்.

ஒரு ஊரில் ஆர். எஸ். எஸ். ஷாகா ஆரம்பிக்கப்பட்டால் அந்த ஊரில் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

#    



பட்டியல் சமுதாய மக்களின் சவாலை ஏற்ற ஆர்.எஸ்.எஸ்

துறவிகள் சாதாரணமாக சுற்றிக்கொண்டு பல நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துரைப்பார்கள். ஆனால் மழை காலத்தில் நான்கு மாதங்கள் சதுர்மாத விரதம் ஏற்று ஒரே ஊரில் தங்குவார்கள்.

பெஜாவர் மடத்தின் விஸ்வேஸ்வரதீர்த்த சுவாமிகள் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் சாதுர்மாத விரதம் ஏற்று மைசூரில் தங்கியிருந்தார். பெஜாவர் சுவாமிகள், சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் எனவும் மிகவும் விரும்புகிறவர். அவர் மைசூரில் தங்கியிருப்பதை அறிந்ததும் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் அவரை அணுகி, பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வீடுகளில் விளக்கேற்றி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதற்கு அவரும் மனமுவர்ந்து ஒப்புக் கொண்டார்.

பெஜாவர் சுவாமிகளும் தினசரி பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வந்தார். இதை கண்ட சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உயர் ஜாதி சன்னியாசியை எங்கள் பகுதி வீடுகளுக்கு அழைத்து வருவது போல, எங்கள் ஜாதி சன்னியாசி ஒருவரை உயர் ஜாதி வீடுகளுக்கு அழைத்து செல்ல முடியுமா என்று சவால் விட்டனர்.

அந்த சவாலை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக் கொண்டது. பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த மதிக (madiga) இனத்தைச் சேர்ந்த துறவி சித்ரதுர்கா ஸ்ரீ பசவமூர்த்தி மதரா சென்னைய சுவாமிகளை பிராமணர்கள் வசிக்கும் தெருவிற்கு அழைத்து சென்றனர்.

ஸ்ரீ பசவமூர்த்தி சுவாமிகள் அந்த பகுதிக்கு வந்த போது, அந்த பகுதி முழுவதும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தெரு முழுவதும் காவிக் கொடிகள் பறந்தன. தெருக்களில் கோலம் போடப்பட்டு மங்களகரமாக காட்சியளித்தது. சுவாமிகள் ஒவ்வொரு வீடாக சென்றார். சுவாமிகளை பூஜை அறைக்கு அழைத்துச் சென்று அவரது கையால் விளக்கேற்றுமாறு கேட்டுக் கொண்டனர். சுவாமிகளும் மிகவும் சந்தோஷமாக அதை நிறைவேற்றினார்.

ஆரம்பத்தில் ஸ்ரீ பசுவமூர்த்தி சுவாமிகளுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்ட ஆத்மார்த்தமான வரவேற்பு, மரியாதை அவரை நெகிழ வைத்தது.

பெரிய பெரிய ஆர்ப்பாட்டம் இல்லை. போராட்டம் இல்லை. ஒரு பெரிய புரட்சி அமைதியாக நடைபெற்றது.

சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக ஆர்.எஸ்.எஸ். செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

#  

மேட்டுப்பாளையத்தில் ஒரு சமரஸதா மயானம் உருவாக்கிய ஆர்.எஸ்.எஸ்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தம்பிள்ளை என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை இந்து சமுதாயத்தினர் மயானம் மற்றும் பித்ரு கார்ய பயன்பாட்டிற்காக தானமாக அளித்து இருந்தார். காலப்போக்கில் அந்த இடத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பு செய்தனர். மயானத்திற்காக சிறு இடம் மட்டுமே செயல்பாட்டில் இருந்தது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் தொண்டர்கள் 1987ஆம் ஆண்டு அந்த இடத்தைச் சுத்தம் செய்த போது பிரச்னை ஏற்பட்டது. 12பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆக்கிரமிப்பு செய்த இடத்தை மீட்டு ஹிந்து சமுதாய மக்களின் பித்ரு கார்யங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று 38 ஜாதி சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்து  ‘அனைத்து ஹிந்து சமுதாய சங்கம்’  என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினர். ஊர் முக்கியஸ்தர் திரு C.பொன்னுசாமி கவுண்டர் தலைமையில் அரசாங்கத்துக்கு மனு அளித்தனர். ஆவணங்களை சரிபார்த்த அரசு அதிகாரிகள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு நபர்களிடமிருந்து மீட்டனர். அனைத்து ஹிந்து சமுதாய சங்கத்தினரின் கோரிக்கையை ஏற்று மேட்டுப்பாளையம் நகராட்சி 2003ஆம் ஆண்டு மயானத்தின் ஒரு பகுதியை நந்தவன பயன்பாட்டுக்காக கொடுக்க ஒப்புதல் அளித்தது.

அங்கு அவர்கள் மயானத்தை அழகுபடுத்தியும், படித்துறை அமைத்தும் அருமையான நந்தவனத்தையும் உருவாக்கியுள்ளனர். இந்த மயானமும், நந்தவனமும் அனைத்து ஜாதியினருக்கும் பொதுவானது என்பது விசேஷம்.

தென்னகத்தின் வற்றாத ஜீவநதியான பவானி நதியின் கரையோரம் அமைந்துள்ளது இந்த இடம். காசியின் அரிச்சந்திர மயானத்தின் அமைப்பைப் போலவே, இயற்கையாகவே அமைந்த பவானி நதியின் தென்கரையில் மயானமும், மயானத்தை ஒட்டிய பகுதியில் நந்தவனமும் அமைந்துள்ளது. தெற்கில் காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிவலிங்கம் அமைந்த ஸ்ரீமாதேஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது.

இந்த இடத்தில் ஆடி, தை அமாவாசை காலத்திலும், புரட்டாசி மாத மாகாளய அமாவாசை காலங்களிலும் 50,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடி பித்ரு கார்யங்களை செய்து வருகிறார்கள்.

இதில் என்ன விசேஷம் என்றால், பட்டியல் சமுதாய மக்களிடமும், பித்ரு கார்யம் செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றி எடுத்து கூறி, இன்று அவர்களும் ஆயிரக்கணக்கில் வந்து கலந்து கொள்கிறார்கள்.

இங்கு கார்யம் செய்யும் புரோகிதர்களும் கார்யம் செய்வதற்கு பணம் கட்டாயப்படுத்துவது இல்லை. கொடுக்கின்ற தொகையை வாங்கிக் கொள்கின்றனர்.

இங்கு சுற்றுப்புறச் சூழல் பணியும் நல்ல முறையில் நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையத்தில் உருவாகிற குப்பைகளை இங்கு பிரித்து, இயற்கை உரமாகவும் உற்பத்தி செய்யப்படுகிறது.

இது போன்ற மயானமும், சிரார்த்தக் கூடமும் தமிழகத்தில் எங்கும் இல்லை என்பது சிறப்பு. சமுதாய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது.

#  

கோயில் பிரசாதத்தில் பாரபட்சம் - போராட்டத்துக்கு ஆதரவு அளித்த ஆர்.எஸ்.எஸ்.

குருவாயூரில் 1983 பிப்ரவரியில் ஒரு அற்புதமான சம்பவம் நடைபெற்றது. திருவனந்தபுரத்திலிருந்து 200 பட்டியல் சமுதாயத்தினர் பாதயாத்திரையாக குருவாயூருக்குப் புறப்பட்டார்கள்.

குருவாயூரிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்தில் பிராமணர்களுக்கு மட்டும் உணவளிக்கும் பழக்கம் இருந்தது. இந்தப் பாரபட்சமான பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இவர்கள் பாதயாத்திரையாக புறப்பட்டிருந்தார்கள். அந்தக் குழுவின் தலைவர், ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் ஒத்துழைப்பையும் கோரியிருந்தார்.

கிறிஸ்தவப் பத்திரிகைகளும், கம்யூனிஸ்ட் பத்திரிகைகளும் இந்த பாதயாத்திரைக்கு அளித்த பிரச்சாரத்தைப் பார்த்தால், ஹிந்து சமுதாய ஒற்றுமைக்காக பாடுபடுபவர்களை பலத்த சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்பதே அவருடைய உள்நோக்கம் என்று தோன்றியது.

பாதயாத்திரையாக வருபவர்களுக்கு வழிநெடுக ஒத்துழைப்பு நல்குமாறு ஸ்வயம்சேவகர்களுக்கும், விசால ஹிந்து சம்மேளன ஊழியர்களுக்கும் அறிவுறுத்தி ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும், விசால ஹிந்து சமய தலைவர்களும் அறிக்கை வெளியிட்டார்கள்.

இப்படி ஒரு வரவேற்பு வழிநெடுக தங்களுக்குக் கிடைக்குமென்று பாதயாத்திரைக் குழுவினர் கனவிலும் கருதியிருக்க மாட்டார்கள். அந்த அளவு நல்ல வரவேற்பு அவர்களுக்குக் கிடைத்தது.

ஒவ்வொரு ஊரிலும் பாதயாத்ரீகளை ஸ்வயம்சேவகர்கள் வரவேற்று அவர்களோடு இனிமையாகப் பழகி, உணவு, தங்குமிடம் முதலிய ஏற்பாடு செய்து உபசரித்தார்கள். வழியில் பாதயாத்திரைக் குழுவினரைப் பற்பல கோயில்களுக்கு அழைத்துச் சென்று, பஜனை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளச் செய்து விருந்தும் அளித்தார்கள். சில ஊர்களின் குழுவினரை பூரண கும்பத்தோடு வரவேற்றார்கள்.

துவக்கத்தில் குழுவினருக்கு சங்கத்தைப் பற்றி என்ன அபிப்ராயம் இருந்தாலும், இப்போது அதெல்லாம் மாறி சங்கத்தின் மீது அவர்களுக்கு அன்பு பிறந்தது.

கோயில் நிர்வாகிகளும் பாதயாத்திரைக் குழுவினரை அன்புடன் வரவேற்றார்கள். ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களும் விசால ஹிந்து சம்மேளன ஊழியர்களும் அவர்களை கோவிலுக்குள் மேள தாளத்தோடு அழைத்துச் சென்றார்கள். பஜனை பாடல்களை, இறைவன் திருநாமத்தை முழங்கியபடி அனைவரும் ஆலயத்துக்குள் பிரவேசித்தார்கள். அனைவருக்கும் ஆலயத்தின் போஜன சாலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது.

ஸ்வயம்சேவகர்கள் தங்களுடைய குடும்பத்தோடு வந்து பாதயாத்திரைக் குழுவினோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தினார்கள்; இவர்களில் பல ஆசாரமான நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

சுமுகமாக சூழ்நிலையும் நல்லுறவும் நிலவுவது கண்ட மாநில முதல் முதலமைச்சரும் அவர்களோடு உணவு அருந்த அமர்ந்தார்!

‘மாத்ரு பூமி’ பத்திரிகை இவ்வாறு வர்ணித்தது: ‘பாதயாத்திரைக் குழுவினரையும் விட, இந்த நிகழ்ச்சியில் தீவிரமாக பங்கு கொண்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள்.’

  • (ஆதாரம்: ஆர்.எஸ்.எஸ். ஆற்றும் அரும்பணிகள்)

#

இட ஒதுக்கீடு: ஆதரவளித்த ஆர்.எஸ்.எஸ்.



குஜராத்தில் 1988இல் இட ஒதுக்கீடு சம்பந்தமாக ஒரு பிரச்னை ஏற்பட்டது. குஜராத் சட்டசபையில், பின்தங்கிய மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டு வரப்பட்டது. இட ஒதுக்கீட்டை ஆதரித்தும், எதிர்த்தும் மிகப் பெரிய போராட்டங்கள் அப்போது நடைபெற்றன.

ஆர்.எஸ்.எஸ்.ஸின் அகில பாரத பிரதிநிதி சபை கூட்டம் அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த கூட்டத்தில் இட ஒதுக்கீட்டை ஆதரித்து அறிக்கை வெளியிடுவதற்காக வாசகம் அனைத்து பிரதிநிதிகள் முன்பு வைக்கப்பட்டது. அறிக்கை வாசகங்கள் குறித்து பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

இட ஒதுக்கீடு ஆதரவு அறிக்கை வாசகத்தைப் பார்த்ததும் குஜராத் ஊழியர்கள் மிகவும் வேதனைப்பட்டனர். அதன் ஒவ்வொரு சொல்லையும் எடுத்துக்கொண்டு விரிவாக விவாதம் நடத்தப்பட்டது. பலர் ஆதரித்தும், பலர் எதிர்த்தும் பேசினார்கள்.

அப்போது சங்கத்தின் மூன்றாவது தலைவர் ப.பூ.ஸ்ரீ பாளாசாகேப் தேவரஸ்ஜி அனைத்து விவாதங்களையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். இறுதியில் அவர் இவ்வாறு பேசினார்:

“இட ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை மீது நடைபெற்ற விவாதம் முழுவதையும் நான் கேட்டுக் கொண்டிருந்தேன். நம்மில் சிலர் இந்த அறிக்கையை எதிர்க்கின்றனர். இதுவும் கவனத்திற்கு வந்தது. இட ஒதுக்கீடு பயன் பெறுபவர்களின் மனநிலையில் இருந்து நாம் இந்த பிரச்னையை ஆராய வேண்டும் என்று நான் கூற விரும்புகிறேன். நான் தங்கள் எல்லோரிடமும் வேண்டிக்கொள்வது, பல நூறு ஆண்டுகளாக கவனிக்கப்படாமல், ஒதுக்கி வைக்கப்பட்ட நமது சகோதரர்களின் இன்றையநிலை என்ன என்பதை பாருங்கள். அவர்களது உணர்வுகளை எண்ணிப் பாருங்கள். அதன்பிறகு இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வாருங்கள்” என்றார்.

ஸ்ரீ தேவரஸ்ஜி இவ்வாறு பேசியபிறகு அறிக்கை மீது குறிப்பிடத்தக்க அளவில் விவாதம் நடைபெறவில்லை. உடனே அறிக்கை ஏற்கப்பட்டது. இவ்வாறு சங்கம் அதிகாரப்பூர்வமாக இட ஒதுக்கீட்டை ஆதரித்தது.

இதேபோல மகாராஷ்டிரத்தில் மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டும் போது ஏற்பட்ட போராட்டத்திலும் ஸ்ரீ தேவரஸ்ஜி, டாக்டர் அம்பேத்கர் பெயருக்கு ஆதரவாகப் பேசினார்.

சமுதாயத்தில் சமரஸதா ஏற்பட வேண்டும் என தீவிரமாக இருந்தவர் ஸ்ரீ தேவரஸ்ஜி. “வர்ண முறை, ஜாதி முறை இவை தற்போது முறையற்றவை யாகிவிட்டன.  ‘தீண்டாமை பாவம் இல்லையென்றால் உலகில் வேறு எதுவும் பாவமில்லை’. எனவே அதனை வேரும், வேரடி மண்ணும் இல்லாமல் அழிக்க  வேண்டும்” என்று கூறினார்.

சமுதாயத்தில் சமரஸதா மனப்பான்மையை உருவாக்குவதில் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.

#  



ஜாதி வித்தியாசம் பார்க்காத ஆர்.எஸ்.எஸ்.


நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் மிகச் சிறந்த நீதிபதி. அவர் ஓய்வு பெற்றதும் சென்னையில் உள்ள விவேகானந்தா கல்வி கழகத்தின் தலைவராக பொறுப்பேற்றார்.

ராஜபாளையத்தியல் 1979ஆன் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்ஸின் பண்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்குவதற்காக நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அழைக்கப்பட்டிருந்தார்.

அப்போது நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்தவர் திரு. கோவிந்தன்ஜி. இவர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் (முழு நேர ஊழியர்) மற்றும் இப்போதுள்ள திருச்சி, வேலூர், சேலம் மாவட்டங்களை உள்ளடக்கிய கோட்டத்தின் அமைப்பாளர்.

ராஜபாளையம் முகாமில் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியாரும், திரு. கோவிந்தன் ஜியும் சந்திக்கிறார்கள். அப்போது திரு. கோவிந்தன் ஜி தன்னை ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் என்று அறிமுகப்படுத்தி கொள்கிறார். அப்போது தான் பிறந்த ஊரையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். அவர்கள் இருவருக்கும் சொந்த ஊர்; செங்கற்பட்டு மாவட்டம், ஆத்தூர்.

திரு. கோவிந்தன்ஜி தன்னுடைய சொந்த ஊரைச் சேர்ந்தவர் என்று அறிந்ததும் நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியாருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். 

அப்போது கோவிந்தன் ஜி, “ஐயா 30 ஆண்டுகளுக்கு முன்னால் உங்கள் ஊரில் அழுக்குத் துணி எடுத்து சலவை செய்ய ஒரு அம்மா வருவார்கள். நீங்களும் நிறைய உதவி செய்வீர்களே நினைவிருக்கிறதா?” என்று கேட்டார். “ஆமாம் நன்றாக நினைவிருக்கிறது ஒருநாள் அந்த அம்மா அவங்க பையனை அழைத்து வந்தார். என்ன தம்பி நீ பள்ளிக்கு போகவில்லையா என்று கேட்டேன். வசதியின்மையால் படிக்கவில்லை என்று கூறினான். அவன் படிப்புக்குத் தேவையான உதவிகளை நான் செய்தேன்” என நினைவு கூர்ந்தார்.

“ஆம். ஐயா. அந்த பையன் நான் தான். தாங்கள் செய்த உதவியால்தான் நான் நன்கு படித்தேன். அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ். ஈடுபாட்டால் ஆர்.எஸ்.எஸ்ஸில் முழு நேர ஊழியராக ஆகிவிட்டேன். இப்போது கோட்ட அமைப்பாளராக ஆகியிருக்கிறேன்”.

நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியமாகி ஆகிவிட்டது. திரு. கோவிந்தன் அவர்களை அப்படியே கட்டி அணைத்துக் கொண்டார்.

நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அங்கிருந்த சங்கத்தின் மூத்த பிரச்சாரக் திரு சூர்ய நாராயணராவ் அவர்களிடம்,  “நீங்கள் ஆர்.எஸ்.எஸ். பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை. திரு. கோவிந்தன் ஜி மூலமாக அனைத்தும் தெரிந்துக் கொண்டேன்” என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ்.ஸில் குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டுமே பொறுப்புக்கு வர முடியும் என்று வெளி உலக பொய் பிரச்சாரத்தைக் கவனித்த அவருக்கு உண்மை நிலை புரிந்தது.

அதன் பிறகு சேவாபாரதி தமிழ்நாடு தொண்டு அமைப்பின் புரவலர் பொறுப்பை ஏற்று சேவைப் பணியாற்றினார்.

ஆர்.எஸ்.எஸ். எப்போதும் ஜாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் நிதர்சனமாகி உள்ளது.

#  

அனைவர் கையாலும் சிவனுக்கு அபிஷேகம் – முறை ஏற்படுத்திய ஆர்.எஸ்.எஸ்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டிக்கு அருகிலுள்ளது திருவதிகை. இங்கு வீரட்டனேசுவரர் கோயில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இந்தக் கோயில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோயில்களில் ஒன்று.

சில காலம் சமண மதத்தை தழுவியிருந்த திருநாவுக்கரசரை (அப்பர்) சைவத்துக்கு கொண்டு வந்த திருத்தலம். திலகவதியார் தன் தம்பியாகிய மருள்நீக்கியாரை (அப்பர்) நல்வழிப்படுத்துமாறு இறைவனை வேண்ட, இறைவன் "சூலை தந்து ஆட்கொள்வோம்" என்று பதிலுரைத்து ஆட்கொண்ட திருத்தலம். இவர் முதலில் தேவாரப்பாடல் பாட ஆரம்பித்த தலம்.

இப்படிப்பட்ட புனித தலத்தில் ஆர்.எஸ்.எஸ். யோகா ஷாகா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சமுதாயத்தில் உள்ள முக்கியஸ்தர்கள், வியாபாரிகள் தினசரி காலை வேளையில் சந்தித்து யோகா பயிற்சி செய்து, சமுதாயத்தைப் பற்றியும் சிந்திப்பார்கள்.

2006 ஸ்ரீ குருஜி நூற்றாண்டு சமயத்தில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. இந்த ஷாகாவைச் சேர்ந்த உறுப்பினர்களும் தங்கள் ஊரில் சமுதாய நல்லிணக்கம் ஏற்பட ஏதாவது செய்ய வேண்டும் என யோசித்தார்கள்.

இதற்காக பண்ருட்டியில் சமுதாய நல்லிணக்க கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ். தென் பாரதத் தலைவர் திரு இரா. வன்னியராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 18 ஜாதி சங்கங்களிலிருந்து 64 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

சமுதாய பிரச்சனை குறித்து அனைவரும் தங்கள் கருத்தை தெரிவித்தனர். ஹிந்து சமுதாய ஆன்மிக அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு சமுதாய நல்லிணக்கப் பணிகள் செய்வதென முடிவு செய்யப்பட்டது. ஜாதி வேறுபாடு களால் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்த இந்த மாவட்டத்தில், சமுதாயத்தில் நல்லிணக்கம் உருவாக்கக்கூடிய பணி செய்ய வேண்டும் என விரும்பினர்.

திருவதிகை கோயில் பிரகாரத்திலுள்ள சிவலிங்கத்தை பொது மக்கள் அனைவரும் சிவராத்ரி அன்று தங்கள் கையால் தொட்டு அபிஷேகம் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினார்கள். சில முக்கியஸ்தர் களிடம் இது சம்பந்தமாக பேசிய போது, அவர்களும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டனர்.

2009 சிவராத்திரி முதல் எல்லா சமுதாய மக்களும் தங்கள் கையால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது தொடங்கியது. அதுமுதல் வருடாவருடம் சிவராத்ரி அன்று இது நடைபெற்று வருகிறது. அனைத்து சமுதாய மக்களும் மகிழ்ச்சியுடன் இதைச்செய்து வருகின்றனர்.

வடமாநிலங்களில் தான் சிவனுக்கு அனைவரும் தங்கள் கையால் அபிஷேகம் செய்யும் பழக்கம் இருந்து வருகிறது. அதைப் போல தமிழகத்திலும் திருவதிகை கோயிலில் இந்த வழக்கத்தை ஆர்.எஸ்.எஸ். உருவாக்கி நடத்திக் கொண்டிருக்கிறது.

#  

அனைவருக்கு ஆலயம் - சாதித்த ஆர்.எஸ்.எஸ்.



ராமநாதபுரம் அரண்மனையில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா ஆரம்பித்து நடந்து கொண்டிருந்தது. சேதுபதி மகாராஜாவின் மகளை திருமணம் செய்த ஜமீன் பட்டணம் சாமி பரம்பரையில் வந்தவர் ஆத்மநாத சுவாமி. அரண்மனையில் நடைபெற்று வரும் ஆர்.எஸ்.எஸ். தினசரி பண்பு பயிற்சியில் ஈர்க்கப்பட்டு அவரும் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஐக்கியமானார். ராமநாதபுரம் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவராகவும் பொறுப்புக்கு வந்தார்.

முதுகுளத்தூர் தாலுகா, பிரபுக்கலூர் அரண்மனை முருகன் கோவிலில் திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அரண்மனை வழக்கப்படி முதல் மரியாதை பெற வேண்டிய ஆத்மநாத சுவாமி, வரவை எதிர்பார்த்து ஊர் பிரமுகர்கள் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் ஆத்மநாத சுவாமி கோவில் பந்தலுக்குள் வராமல் வெளியே நின்று கொண்டிருந்தார். பிரதான பூஜை நடைபெறும் போது அவரை உள்ளே வரும்படி ஊர் பெரியவர்கள் அழைத்தனர். ஆனால் ஆத்மநாத சாமி அவர்கள் உள்ளே வராமல் அமைதியாக வெளியே நின்று கொண்டிருந்தார்.

 ‘ஐயா பூஜை நேரம் ஆகிறது. உள்ளே வாங்க’ என்று பலரும் குரல் கொடுத்தனர்.

‘இல்லை நான் வரவில்லை’ என்றார் ஆத்மநாத சுவாமி. ‘ஐயா ஏன் வர மறுக்கிறீர்கள்? ஒன்றும் புரியவில்லையே? என்றார்கள் பெரியவர்கள்.

‘இந்த ஊர் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எப்பொழுது நம் முருகன் கோயிலுக்கு உள்ளே வந்து சாமி தரிசனம் செய்கிறார்களோ அப்போதுதான் நானும் தரிசனம் செய்வேன்’ என்று உறுதியாக சொன்னார் ஆத்மநாத சுவாமி.

அங்கேயே ஊர் நாட்டாமைகள் சேர்ந்து கூட்டம் போட்டு ஆலோசனை செய்தனர். ஆத்மநாத சுவாமி அவர்கள் சொன்ன பிறகு எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை என்று கூறினார்கள்.

அதன்படி ஆத்மநாத சாமியோடு பட்டியல் சமுதாய மக்களையும் கோவிலுக்கு வர அனுமதித்தனர். அதோடு ஜாதிய ஏற்றத்தாழ்வு அங்கு அகன்றது.

#