வெள்ளி, 6 பிப்ரவரி, 2026

சமுதாய நல்லிணக்கம் ஏற்படுத்த ஆர்.எஸ்.எஸ்ஸால் மட்டுமே முடியும் - தி.க. பிரமுகர் புகழாரம்


திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறு கிராமம் மாடப்பள்ளி. 1979ஆம் ஆண்டு துக்ளக் பத்திரிகையில் வெளியான ஸ்ரீ சூரிஜியின் பேட்டியைப் படித்து விட்டு அந்த ஊரைச் சேர்ந்த திரு. மூர்த்தி என்பவர் அந்த ஊரில் ஷாகா (ஆர்.எஸ்.எஸ். கிளை) துவக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

அதன் அடிப்படையில் ஆர்.எஸ். எஸ். பிரச்சாரக்கள் ஸ்ரீ ம. வீரபாகுஜி, ஸ்ரீ ஜோதிஜி ஆகியோர் அந்த ஊருக்குச் சென்று ஷாகா துவக்கினர். தினசரி நடைபெற்று வந்த இந்த ஷாகா அந்த ஊரில் மிகுந்த பரபரப்புக்கு உள்ளானது.

இதைக் கண்டு பொறுக்க முடியாத உள்ளூர் திராவிட கழகத்தினர் ஷாகா நடைபெறும் இடத்தில் நின்று கேலி செய்வது, கூக்குரல் இடுவது, இரவு நேரத்தில் மைதானத்தை அசுத்தம் செய்வது போன்ற செயல்களை செய்தனர். திரு மூர்த்தி அவர்களிடன் சென்று சமாதானமாக பேசிப் பார்த்தார். போக்கிரிதனம் நிற்கவில்லை.
 
மேலும் தி.க.வினர் வீடு வீடாக சென்று ஆர்.எஸ்.எஸ். காந்தியை சுட்ட இயக்கம். உங்க பிள்ளைகளை அனுப்பாதீர்கள் என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் மூர்த்தி மீது உள்ள அன்பின் காரணமாக மாணவர்கள் ஷாகா வந்து கொண்டிருந்தனர். தொடர்ந்து பிரச்சனை நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் ஸ்ரீ வீரபாகுஜி, ஸ்ரீ ஜோதிஜி இருவரும் அந்த ஊர் தி.க. செயலாளர் ஆசிரியர் திரு பழனி என்பவரை சந்தித்து ஆர்.எஸ்.எஸ். பணிகளைப் பற்றி விளக்கினர். ஆனாலும் அவர் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

ஸ்ரீ வீரபாஜி கடைசியாக, “நீங்கள் கற்பனையாக குற்றம் சாட்டுகிறீர்கள். இது ஜனநாயக நாடு. உங்க கருத்தை சொல்லவும், இயக்கம் நடத்தவும் உங்களுக்கு உள்ள உரிமை போன்று எங்களுக்கும் உள்ளது. யார் வழியையும் யாரும் தடை போட வேண்டிய அவசியம் இல்லை” என்று கூறிவிட்டு எழுந்து விட்டார்.

ஸ்ரீ வீரபாகுஜியின் பேச்சுக்கு பிறது சில காலம் பிரச்சனை இல்லாமல் இருந்தது. திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் பழனி மற்றும் மூன்று பேர் கையில் ஒரு டப்பாவுடன் ஷாகா நடக்கும் மைதானத்திற்கு வந்தனர். எதோ விபரீதம் நடக்கப்போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டினர். அவர்கள் வந்து ஒரு திண்டில் அமர்ந்து கொண்டனர்.

ஷாகா முடிந்த பின் எல்லோரும் கலைந்து செல்ல இருந்த போது, அவர்கள் உள்ளே வந்தனர்.  “தம்பிகளா. ஒரு நிமிஷம். இன்று ஈ.வே.ரா பிறந்த தினம். கடந்த சில தினங்களாக உங்கள் பயிற்சியை நான் எதிரில் உள்ள கடையில் அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். ஈ.வே.ரா கண்ட சமத்துவ சமுதாயத்தை நீங்கள்தான் உண்மையில் உருவாக்கி வருகிறீர்கள். இந்த ஊருக்கு ஈ.வே.ரா.வை அழைத்து வந்து கூட்டம் நடத்தியவன். ஆனால் எங்களால் செய்ய முடியாததை நீங்கள் தினசரி செய்து கொண்டிருக்கிறீர்கள். செட்டியார் வீட்டுப் பையன்களும், வெள்ளாளர் வீட்டுப் பையன்களும், வண்ணார் வீட்டுப் பையன்களும், வன்னியர் வீட்டுப் பிள்ளைகளும், குறும்பர் சமுதாயப் பிள்ளைகளும் ஒன்றுகூடி எந்தப் பாகுபாடும் இல்லாமல் விளையாடுவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன்” என்று வாழ்த்தி இனிப்புகளை எல்லோருக்கும் வழங்கினார். அது முதல் அவரும் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர் ஆகிவிட்டார்.

ஒரு ஊரில் ஆர்.எஸ்.எஸ். ஷாகா ஆரம்பிக்கப்பட்டால், அந்த ஊரில் சமுதாய நல்லிணக்கம் ஏற்படும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

#  

செவ்வாய், 16 ஜூலை, 2024

ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா


டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா 21.04.2024 அன்று சென்னை சேத்துப்பட்டு சமதி அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் திரு. M.சுகுமாரன் தலைமை தாங்கினார். துளசிதாஸ் பவுண்டேஷன் நிறுவனர் V.T. பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி அறங்காவலர் A.ராமகிருஷ்ண பிரசாத் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பட்டியல் சமுதாயத்திற்காக சேவையாற்றி வருபவர்களுக்கு சமுதாய நல்லிணக்க விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பத்துடன் கலந்துக் கொண்டனர்.

தலைமை உரையாற்றிய திரு சுகுமாரன், ”ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் மாணவர்கள் மூலம் நடைபெறும் சேவைப் பணிகளை எடுத்தரைத்தார்” என்றார்.

சிறப்புரை ஆற்றிய திரு. ராமகிருஷ்ண பிரசாத்,  “சமுதாயத்தில் எதிர்மறையான விஷயங்கள்தான் தற்போது அதிகம் வெளியே தெரிகிறது. ஆனால், உண்மை அவ்வாறு இல்லை. சமுதாயத்தில் நேர்மறையான விஷயங்களும் அதிகமாக இருக்கிறது. அதில் யாரும் கவனம் செலுத்துவதில்லை. டாக்டர் ஹெட்கேவார் நேர்மறையான சிந்தனைகளை விதைத்திருக்கிறார். சமுதாயத்தில் இன்றைக்கும் நல்ல விஷயங்கள் செய்யக்கூடியவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.”

“அனைவரையும் மதிக்க வேண்டும். இதைத்தான் டாக்டர் அம்பேத்கரும், டாக்டர் ஹெட்கேவாரும் கூறுகிறார்கள். இந்து தர்ம கொள்கையும் அதைதான் சொல்கிறது. அனைவருக்குள்ளும் இறை தன்மை உள்ளது. அதனால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என யாரும் இல்லை.”

“அத்தகைய ஒரு பார்வை இருப்பதினால் தான் ராஜஸ்தானைச் சேர்ந்த உஷா செளகான என்கிற பெண்மணிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டு உள்ளது. மலம் அள்ளும் குடும்பத்தைச் சேர்ந்த அவர் பத்மபூஷன் விருது பெறும் அளவிற்கு வளர்ந்தார். அதற்காக அவர் மேற்கண்ட முயற்சிகள் பல. அடித்தளத்தில் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்களை நேர்மறையாக அணுகும் பார்வை நமக்குத் தேவை என்றார்.”

“நாம் உள்வாங்கும் விஷயங்கள் எதிர்மறையாக இருக்கும்போது அது நமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. சமுதாயத்தில் அற்புதமான விஷயங்கள் ஏராளமாக நடக்கின்றன. அதனை உள் வாங்கினால், நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே, சுயநலம் இல்லாமல், மற்றவர்கள் செய்யக்கூடிய நல்ல விஷயத்தை நாம் பார்க்க வேண்டும், வரவேற்க வேண்டும்” என்றார்.

விழாவில் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்றி, சமுதாயத்தில் நிலவும் வேறுபாடுகளை களைந்து, சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சேவை செய்துவரும், ஸ்ரீ ரங்க பராங்குக பரகால ராமானுஜ மடத்தின் மடாதிபதி முனைவர் செல்வி ஸ்ரீ பிள்ளை நரசிம்மப்பிரியா, மேட்டுபாளையம் டாக்டர் அம்பேத்கர் பொது நல மன்றத்தின் தலைவர் பகத்சிங், வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் டியுஷன் சென்டர் நிறுவனர் திருமதி சுகன்யா சங்கர், பெரம்பூர் டாக்டர் அம்பேத்கர் மன்றத்தின் நிறுவனர் டாக்டர் V.சூரியகுமார், சிவ பண்டார வழிபாடு நீத்தார் கடன் மற்றும் முத்தி வழிபாடு அருள் சேவகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

முனைவர் செல்வி ஸ்ரீ பிள்ளை நரசிம்மப்பிரியா அம்மா சுவாமிகள் வைஷ்ணவ சம்பிரதாயத்தின் மடாதிபதி. மாணவர்களுக்கு திவ்ய பிரபந்தம் மற்றும் வைணவ சம்பிரதாயம் முறையை பல ஆண்டுகளாகவும் கற்று கொடுத்து வருகிறார். தனது தந்தையார் கனவுகளை நினைவாக்கும் விதமாக துறவறம் ஏற்று இந்த பணிகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஸ்ரீகாந்த் வியாசர்பாடியைச் சேர்ந்தவர். கொரோனா காலத்தில், நெருக்கடியான சூழலிலும் காலமான 120 பேருக்கும் பாரம்பரிய முறையில் இறுதி சடங்குகள் செய்தவர். எவ்வித கெட்டப் பழக்கமும் இல்லாமல் காலமானவர்களுக்கு இறுதி சடங்குகள் செய்து வருபவர். குறைந்த பணத்தில் அல்லது பணம் பெறாமல் இந்த சேவைகளை செய்து வருகிறார்.

பகத்சிங் மேட்டுப்பாளையம் அம்பேத்கர் பொதுநல மன்ற தலைவர் இருந்து வருகிறார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் 40 ஆண்டுகளாக இந்த மன்றத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் பட்டியல் சமுதாய மக்களுக்கு பல விதமான தொண்டுகள் ஆற்றி வருகிறார்.

டாக்டர் V. சூரியகுமார் பெரம்பூர் அம்பேத்கர் மன்றத்தின் நிறுவனர். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால் வாழ்க்கையில் பல பிரச்சினைகளை எதிர்கொண்டவர். இன்று பல உயர் படிப்புகள் படித்து மற்றவர்களுக்கும் சேவை செய்து கொண்டு இருக்கிறார். அம்பேத்கர் இலவச பாடசாலை நடத்தி வருகிறார். ஒரு பள்ளிக்கூடமும் நடத்தி வருகிறார். சுமார் 350 மாணவர்களை பட்டப்படிப்பு படிக்க வைத்திருக்கிறார்.

திருமதி சுகன்யா சங்கர் வியாசர்பாடியில் அம்பேத்கர் இரவு பாடசாலைகளை நடத்தி வருகிறார். மிகவும் பின்தங்கிய பகுதியில் மகளிர் குழு அமைத்து அவர்களுக்கு தொழில் முனைவோருக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.

நிகழ்ச்சி முடிவில் அனைவரும் டாக்டர் அம்பேத்கர் படத்திற்கு புஷ்பாஞ்சலி செய்தனர். இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

கடந்த ஆண்டு இதைப் போல நடந்த நிகழ்ச்சியில் தலைமை தாங்கியவர் டாக்டர் A.P. அன்பு செல்வன். இந்த ஆண்டு நிகழ்ச்சிக்கு வந்திருந்து, அதைப் பற்றிய தன்னுடைய கருத்தை அவர் அனுப்பி உள்ளார். அந்த செய்தி:

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கருத்தியல் மற்றும் செயல்பாட்டு வடிவங்களில் நிறைய மாற்றங்கள் தென்பட்டன. இந்நிகழ்வு ஒரு பரஸ்பரமான, எல்லோரும் நன்கு ஐக்கியமான‌ குடும்ப விழாவைப்போல இருந்தது. பொருளறிந்து ஒவ்வொருவரையும் விருதுக்குத் தேர்வு செய்திருந்தார்கள். வெளியில் நடக்கும் பல அம்பேத்கர் விழாக்களில் நான் பங்கேற்றுள்ளேன், விருதுகளும் வாங்கியுள்ளேன். அந்த விழாக்களுடன் ஒப்பிடும்போது வழக்கம் போல பறையர்களை மட்டுமே அழைத்து, பறையர்களாக ஒன்றுகூடி சேரியிலேயே விழா தொடங்கி முடிவடையும். ஆனால் இங்கு பிராமணர் முதல் அனைத்து ஜாதியினரும் வருகை புரிந்து, எவ்வித வேறுபாடும் இன்றி அம்பேத்கரை ஒரு தேசியத் தலைவராகக் கொண்டாடுவதில் இருக்கின்ற சிறப்பையும், மாண்பையும் மரியாதையுடன் உணர முடிந்தது.


 

#

சனி, 30 டிசம்பர், 2023

ஒசூரில் இந்து எழுச்சிக்கு வித்திட்ட ஸ்ரீ வீரபாகுஜி



1981ல் பெங்களூரில் ஒரு ஆர்.எஸ்.எஸ். பைட்டக் ஒன்று நடைபெற்றது. அந்த பைட்டக்கிறகு கர்நாடகாவிலுள்ள எல்லா தாலுகாவிலிருந்தும் ஸ்வயம்சேவகர்களை அழைத்து வரவேண்டும் என்று முடிவு செய்து எல்லோரும் தீவிரமாக பணியாற்றினார்கள்.

குறிப்பிட்ட தேதியில் பைட்டக் நடக்கும்போது. எல்லா தாலுக்காவிலிருந்தும் ஸ்வயம்சேவகர்கள் வந்து இருக்கிறார்களா என்று பார்க்கும் போது, இரண்டு தாலுக்காவிலிருந்து வரவில்லை என்று தெரிந்தது.

ஒன்று ஒசூர், மற்றொன்று தேன்கனிக்கோட்டை எனப்படும் டெங்கனிக்கோட்டை. அப்போது இந்த இரண்டு பகுதிகளும் முழுமையாக தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசக்கூடிய பகுதிகளாக இருந்ததால், சங்க கண்ணோட்டத்தில் கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டு இருந்தது.

தளி பகுதியைத் தவிர வேறு எங்கும் ஷாகா இல்லை. தற்போது திருச்சி கார்யாலயத்தில் பிரச்சாரக்காக இருக்கும் ஸ்ரீகாந்த்தின் தந்தை ஸ்ரீ சீதாராமன்ஜி தளி பகுதியில் ஷாகா நடத்திக் கொண்டிருந்தார். ஸ்ரீ ஹொ.வே. சேஷாத்ரிஜி, ஸ்ரீ கிருஷ்ணப்பாஜி போன்றவர்கள் தளி பகுதிக்கு அப்போது பிரவாஸ் செய்திருக்கிறார்கள்.

பிறகு அரசாங்க கணக்குப்படி பகுதிகள் பிரிக்கப்பட்ட போது, மேற்கண்ட இரண்டு பகுதிகளும் தமிழகத்துடன் இணைக்கப்பட்டன. அதன் பிறகு ஒசூரில் சங்க பணி துவக்குவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. 1985ல் ஸ்ரீ. A.செந்தில்குமார்ஜி (தற்போதைய அகில பாரத சேவா பிரமுக்) ஒசூர் தாலுகா பிரச்சாரக் ஆக வந்தார். ஊரில் சில பெரியவர்களும், சில பள்ளி ஆசிரியர்களும் அவரின் தொடர்புக்கு வந்தனர்.

அவர்களில் நான்கு பள்ளி ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். ஸ்ரீ ஜெகனாதன்ஜி, ஸ்ரீ அன்னையப்பாஜி, அத்திமுகம் ஸ்ரீ விஸ்வநாதன்ஜி, ஸ்ரீ சத்தியநாராயணன்ஜி.

செந்தில்ஜி மூலம் சங்கத்தைப் பற்றி அறிந்துக் கொண்ட அவர்களுக்கு சங்கத்தின் முக்கியத்துவம் புரிந்தது. அதன் பிறகு சங்கத்தை எல்லா இடங்களிலும் கொண்டு செல்ல தீவிர முயற்சி எடுத்தனர். ஒசூர் மற்றும் சுற்றுப்புறத்தில் எங்கு சங்க நிகழ்ச்சி, வர்க நடைபெற்றாலும் மாணவர்களை அனுப்பி வைப்பார்கள். இவர்களுக்கு அந்த பகுதிகளில் இருந்த மரியாதை காரணமாக பெற்றோர்களும் தங்கள் மகன்களை விருப்பத்துடன் முகாம், நிகழ்ச்சிகளுக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் மூலம் ஒசூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் சங்கம் மிக வேகமாக வளர்ந்தது. பல ஊர்களில் ஷாகா துவக்கப்பட்டன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் 1989ஆம் ஆண்டு நாடு முழுவதும் அயோத்தி ஸ்ரீ ராம ஜென்மபூமியில் பிரதிஷ்டை செய்வதற்காக ராம சிலா நிகழ்ச்சி நடைபெற்றது. ஒசூரிலும் அதை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

தமிழகத்தின் திராவிட சிந்தனை, கடவுள் எதிர்ப்பு போன்ற விஷமங்கள் அங்கு நுழையாமல் இருந்த காலக்கட்டம் அது. மக்கள் ஆன்மிக சிந்தனையுடன் இருந்தனர். எல்லா ஊர்களிலும் இருக்கும் ராமர் கோயிலில் வாரந்தோறும் பஜனை நடைபெற்று வந்தன. ராமர் மீது அளவற்ற பக்தியுடன் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.

ஒசூரிலுள்ள ஸ்ரீ நாராயண தாதா ஆஸ்ரமம். அதற்கு நூற்றுக்கணக்கான கிராமங்களில் பக்தர்கள் உண்டு, அப்போதைய அதன் துறவி ஸ்ரீ வெங்கடேச மாஸ்டர் ஸ்ரீ ராம சிலா நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த விரும்பினார். அவருக்கு தொடர்பில் இருந்த கிராமங்களுக்கு ராம சிலா கற்கள் கொடுக்கப்பட்டன.

பூஜிக்கப்பட்ட கற்களை சேகரிக்க நான்கு விதமான ரதங்கள் பாரதத்தில் வலம் வந்தன. ஒசூருக்கு ஜாம்பவான் ரதம் வருகை தந்தது. தமிழகத்திலேயே மிகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்றால் அது ஒசூரில்தான் என்று சொல்ல வேண்டும். நுற்றுக்கணக்கான டிராக்டரில் பூஜிக்கப்பட்ட கற்களை மக்கள் பயபக்தியோடு கொண்டு வந்து அளித்தனர். அன்று ஒசூர் நகரமே ஸ்தம்பித்து போயின. இவ்வளவு ஆதரவு இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இது சில அரசியல்வாதிகளுக்கு பீதியை உண்டாக்கியது. ஆரம்பத்திலேயே இதை கிள்ளியெறிய வேண்டும் என்று சதித்திட்டம் தீட்டினர்.

அதற்கு வாய்ப்பாக அமைந்தது உடனடியாக வந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம். அமைதியாக சென்று கொண்டிருந்த ஊர்வலத்தில் சில விஷமிகள் உள்ளே நுழைந்து அருகில் இருந்த மசூதி மீது வெடிகளை வெடித்து கலாட்டா செய்தனர்.

ஏற்கனவே தயாராக காத்துக் கொண்டிருந்த காவல்துறை அப்பாவி மக்கள் மீது தடியடி நடத்தியது. கலாட்டகளுக்கு சம்பந்தமில்லாத ஸ்ரீ செந்தில் குமார்ஜி கைது செய்யப்பட்டார். கார்யாலயத்திற்குள் புகுந்த காவல்துறையினர் அதனை துவம்சம் செய்தனர்.

இதனைக் கண்டித்து ஒருகண்டனக் கூட்டம் நடத்த வேண்டும் என்று சேலம் விபாக் பிரச்சாரக் ஆக இருந்த ஸ்ரீ வீரபாகுஜி முடிவு செய்தார். அப்போது ஒசூரில் சங்கத்தை தவிர பாரதிய ஜனதா கட்சி மட்டுமே இருந்தது. அதுவும் அப்போதுதான் துளிர் விட்டு இருந்தது. பாஜக பெயரில் கண்டனக் கூட்டத்தை நடத்த ஸ்ரீ வீரபாகுஜி விரும்பினார். மிகவும் கடுமையான முயற்சி எடுத்தார். சுமார் ஒரு மாதம் கழித்து தான் காவல்துறை அனுமதி அளித்தது.

பொதுக் கூட்டத்திற்கு முன், தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு அலாவுதீன், எஸ்.பி. திரு காந்திராஜன் ஆகியோர் அரசியல்வாதிகள், உள்ளூர் முக்கியஸ்தர்கள் அழைத்து ஒரு அமைதி கூட்டத்தை கூட்டினர். பாஜக, இந்து இயக்கங்களை அழைக்கவில்லை. கூட்டம் நடைபெற இருக்கிறது என்பதை அறிந்த ஸ்ரீ வீரபாகுஜி அந்த கூட்டத்தில் அழைப்பு இல்லாமலேயே கலந்துக் கொண்டார்.

அமைதிக் கூட்டத்தில் ஆட்சியர் பேசும் போது, ”இந்த ஊர்களில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு வெளியூர் நபர்களை அனுமதிக்காதீர்கள். இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் வெளியூர் நபர்கள் உடனே வெளியேற வேண்டும்” என்றார். அதைக் கேட்ட ஸ்ரீ வீரபாகுஜி, “நீங்களும் வெளியூர்காரர்தானே. அப்போது நீங்களும் வெளியேறுங்கள்” என்று காட்டமாக பதில் அளித்தார். அதற்கு ஆட்சியர், “நான் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவன். எனக்கு எல்லா அதிகாரங்களும் உண்டு” என்றார். உடனடியாக ஸ்ரீ வீரபாகுஜி, “நான் ஆர்.எஸ்.எஸ்ஸால் நியமிக்கப்பட்டவன். இந்துக்களுக்கு பிரச்சனை என்று வந்தால் அதை தட்டி கேட்க எனக்கும் எல்லா அதிகாரமும் இருக்கிறது” என்றார். அதன் பிறகு ஆட்சியர் வாய் திறக்கவில்லை.

கூட்டத்தை ஒசூர் மையத்திலுள்ள போஸ் பஜாரில் நடத்த காவல்துறை அனுமதி கொடுத்தது. அனுமதி கொடுத்துவிட்டு பல தடைகளையும், தொந்தவுகளையும் கொடுத்தது. கூட்டத்திற்கு அதிக கூட்டம் சேராமல் இருக்க காவல்துறை பல முயற்சிகளை எடுத்தது. கிராமங்களிலிருந்து கூட்டம் வராமல் தடுப்பதற்காக மதியத்திற்கு மேல் நகர பேருந்துக்களை நிறுத்தினர். தேவையில்லாமல் சந்தைப்பகுதியில் தடியடி நடத்தி மக்கள் மனதில் ஒரு பீதியை உண்டாக்கினர்.

கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவந்த வேலையில், ஒரு கும்பல் கூட்டத்தை கலைக்கும் நோக்கத்தில் ஆவேசமாக வந்தது. அவர்கள் ஸ்ரீ வீரபாகுஜியை சுற்றி நின்று மிகவும் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அவர்களது திட்டம் ஸ்ரீ வீரபாகுஜியை மிரட்டி, கூட்டத்தை தடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் ஸ்ரீ வீரபாகுஜி தன்னுடைய மீசையை முறுக்கி, அவரும் அவர்களுக்கு இணையாக கடுமையாக வாக்குவாதம் செய்தார். அதைக் கண்ட அவர்கள் பயந்து பின்வாங்கினர்.

எல்லா தடைகளையும் மீறி ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். பல கிராமங்களிலிருந்து டிராக்டர் எடுத்துக் கொண்டு மக்கள் போராட்டத்தில் குதித்தனர். திரும்பிய பக்கமெங்கும் மக்கள் கூட்டம்தான்.

கண்டனக் கூட்டத்தில் ஸ்ரீ வீரபாகுஜியுடன், ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன், தளி தொகுதி பாஜக வேட்பாளராக பின் அறிவிக்கப்பட்ட ஸ்ரீ ரங்காரெட்டி ஆகியோர் பேசினார்கள். ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்களின் ஆவேசமான பேச்சு மக்களின் மனங்களை கொதிக்க வைத்தது.

மாவட்ட ஆட்சியர் திரு அலாவுதீன், மாவட்ட கண்காணிப்பாளர் திரு. காந்திராஜன் கூட்டத்தின் ஒர் ஓரத்தில் நின்று அனைவருடைய பேச்சுக்களையும், மக்களின் ஆவேசத்தையும் பார்த்து கொண்டிருந்தனர். அவர்களின் கோபம் உச்சக்கட்டத்திற்கு சென்றனர். இந்த எழுச்சியை முளையிலேயே கிள்ளி எறி திட்டமிட்டனர்.

ராம சிலா நிகழ்ச்சிக்கு பிறகு நாடு முழுவதும் ஸ்ரீ ராம ஜோதி யாத்திரை நடைபெற்றது. ஒசூருக்கும் அந்த ரதம் வந்தது. ஒசூரில் அமைதியாக நடைபெற்ற ராம ஜோதி ரதம், தேன்கனிக்கோட்டைக்கு 10.10.1991 அன்று சென்றது. அங்கு ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன்ஜி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு இருந்தார்.

ஒரு குறிப்பிட்ட தெரு வழியாக ஊர்வலம் செல்லக் கூடாது என்று காவல்துறை தடை விதித்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காவல்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கும் போதே, காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்தனர். அடுத்த சில நொடிகளில் துப்பாக்கி சூடும் நடைபெற்றது.

ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன்ஜி மீது கடுமையாக தடியடி தாக்குதல் நடத்தது. அவர் மண்டையிலிருந்து ரத்தம் கொட்டியது. உடனடியாக ஸ்வயம்சேவகர்கள் அவரை காப்பற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

திடீரென துப்பாக்கி சூடு நடைபெற்றதால் ஸ்ரீ நரசிம்மன், ஸ்ரீ பாபு, ஸ்ரீ சங்கர், ஸ்ரீ ராஜா ஆகிய நான்கு அப்பாவி இந்துக்கள் தலை, நெஞ்சு, வயிற்றுப் பகுதியில் குண்டு பாய்ந்து பலியாகினர். அவர்களுடைய உறவினர்களுக்கு கூட சொல்லாமல் உடலை ஒசூரில் அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்ரீ ஆர்.பி.வி.எஸ். மணியன்ஜி, அப்போதைய தர்மபுரி ஜில்லா பிரச்சாரக் ஸ்ரீ சுந்தர்ராஜன்ஜி (தற்போது நியூரோ தெரபி மருத்துவர்), ஸ்ரீ ஆறுமுகம் (தற்போது தக்ஷிண் தமிழ்நாடு பிராந்த பிரச்சாரக்) பள்ளி மாணவர் ஸ்ரீ A.N. அசோக் (தற்போது கீரிடா பாரதி க்ஷேத்ர பொறுப்பாளர்) ஸ்ரீ ரங்கநாத் மற்றும் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதை கண்டித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட சேலத்திலிருந்து ஸ்ரீ வீரபாகுஜி ஓசூர் வந்தார். அவருடன் காலம் சென்ற ஸ்ரீ ரமேஷ்ஜி, K.N. லெட்சுமணன்ஜி, A.K. பழனிசாமிஜி, சிங்கமெத்தை ஸ்ரீ கோபிஜி, ஈரோடு ஸ்ரீ இளங்காந்தி ஆகியோரும் வந்தனர். சென்னையிலிருந்து ஸ்ரீ வேதாந்தம்ஜி, ஸ்ரீ மெய்யப்பன்ஜி ஆகியோரும் வந்தனர். தேன்கனிக்கோட்டையிலிருந்து ஸ்ரீ முரளி வந்திருந்தார். இவர்களுடன் முதல்நாள்தான் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஸ்ரீ செந்தில்குமார்ஜி, ஒசூர் K.S. நரேந்திரன்ஜி மற்றும் பலர், ஒசூரில் முகாமிட்டு இருந்த ஆட்சியரை பார்க்க சென்றனர்.

நீண்ட நேரம் காத்திருந்தும் மாவட்ட ஆட்சியர் இவர்களைப் பார்க்க அழைக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த ஸ்ரீ வீரபாகுஜி இன்னும் சற்று நேரத்தில் எங்களை பார்க்க அழைக்கவில்லையென்றால், வெளியேறி விடுவோம் என்று ஆவேசமாக கூறினார். சற்று நேரத்தில் சில காவல்துறை அதிகாரிகள் வந்து ”பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தாக நீங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டீர்கள்” என்று கூறி கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஊரிலும், தொழில் ரீதியாகவும் மிகவும் முக்கியமானவர்கள். இந்த கலவரத்தில் சம்பந்தம் இல்லாதவர்கள். ஆனால் ஓசூரில் இதைப் போன்ற ஒரு துக்கக்கரமான சம்பவம் நடந்து விட்டதே என்ற சோகத்தில் அவர்கள் ஆட்சியரிடம் நீதி கேட்க சென்றனர். அது பொது அமைதிக்கு பங்கம் என்று காவல்துறை பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைத்தது.

அவர்களுக்கு எளிதில் ஜாமீன் கிடைக்க காவல்துறை விடவில்லை. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு, சுமார் 22 நாட்கள் கழித்து விழுப்புரத்தில் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் கிடைத்தது. விழுப்புரத்தில் சுமார் 23 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் தளர்த்தப்பட்டது.

இது ஒசூர், தேன்கனிக்கோட்டை, தளி பகுதிகளில் இந்து எழுச்சி ஏற்பட காரணமாக அமைந்தது. பிறகு நடந்த தளி சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதற்கு சூத்திரதாரியாக இருந்து செயல்பட்டவர் ஸ்ரீ வீரபாகுஜி.

வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ததின் மூலம் அயோத்தி போராட்டத்திற்கு வழிகாட்டிய ஸ்ரீ வீரபாகுஜி, ஒசூரில் ராம கார்யம் மூலமாக இந்து எழுச்சிக்கு வித்திட்டார் என்றால் அது மிகையாகாது.

  • (1988 ஆண்டியிலிருந்து 1992 ஆண்டு வரை நான் ஒசூரில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்தேன். அப்போது நான் பார்த்த, கேட்ட சம்பவங்களின் தொகுப்பு இது).


#

வியாழன், 21 டிசம்பர், 2023

ஸ்ரீ ஜோதிஜி – முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்



சென்னை, புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த திரு சுந்தரம் திருமதி உண்ணாமலை தம்பதிகளுக்கு பிறந்த ஒரே மகன் திரு சுந்தர. ஜோதி 1955ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் பிறந்தார்.

அப்போது வட சென்னை பட்டாளம் பகுதியில் ஷாகா நன்கு நடைபெற்று வந்தது. திரு சுந்தரம் அவர்கள் புளியந்தோப்பு ஷாகாவின் ஸ்வயம்சேவக். அவர் ஷாகா செல்லும் போது, தனது மகன் திரு ஜோதியையும் அழைத்து செல்வார். திரு ஜோதிஜி பால முதல் ஸ்வயம்சேவக்.

திரு சுந்தரம் B&C மில்லில் பணியாற்றினார். 1948 சங்க தடையை எதிர்த்து சத்யகிரகம் செய்து சிறை சென்றிருக்கிறார்.

ஜோதிஜி PUC படிப்பை முடிந்தவுடன் வடசென்னையில் உள்ள ஒரு மில்லில் பணியாற்றினார். 1975ஆம் ஆண்டு ப்ரதம வர்ஷ சங்க சிக்ஷா வர்கவை திருப்பராய்துரையில் முடித்தார். 1978ஆம் ஆண்டு தன்னுடைய வேலை ராஜினாமா செய்துவிட்டு சேலத்தில் நடைபெற்ற த்வீதிய வர்ஷ சங்க சிக்ஷா வர்கவில் கலந்துக் கொண்டார். வர்க முடிந்த பின் சங்க பிரச்சாரக் ஆனார். 1980ல் மூன்றாம் ஆண்டு வர்க முடித்தார்.

ஸ்ரீ ஜோதிஜி பிரச்சாரக் பயணத்தில் 1978ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகர் பிரச்சாரக். 1980 ஆண்டு வேலூர் தாலுகா பிரச்சாரக். 1981ல் வேலூர் ஜில்லா பிரச்சாரக். 84ல் திருவண்ணாமலை ஜில்லா பிரச்சாரக். 87ல் வேலூர் சஹவிபாக் பிரச்சாரக். 1989ல் ராமேஸ்வரம் விபாக் பிரச்சாரக். 1995 முதல் விஜயபாதம் ஆசிரியர்.

உடல் நிலை சரியில்லாத காரணத்திற்காக 2010 முதல் விஜயபாரதம் மேலாளராக இருந்தார். 2016முதல் சென்னை சஹ கார்யாலய பிரமுக்காக இருந்தார். உடல் நிலை இன்னும் மோசம் அடைந்த பின் 2020 முதல் அவர் எவ்வித பொறுப்பும் இல்லாத பிரச்சாரக்காக கார்யாலயத்தில் இருந்தார்.

திருவண்ணாமலையில் 1986ஆம் ஆண்டு இரண்டு நாட்கள் பிராந்த ஷிபிர் நடைபெற்றது. அதில் சர்சங்கசாலக் ப.பூ. தேவரஸ் ஜி கலந்து கொண்டார். அந்த ஷிபிர் ஏற்பாடுகளை எல்லாம் செம்மையாக கவனித்தார். ஷிபிரில் புதிய பாடல் போட்டி நடைபெறும் என்று அறிவிப்பு இருந்தது. அத்தனை வேலைகளுக்கும் நடுவிலும் அவர் ஒரு புதிய பாடலை தயாரித்தார். அதற்கு அவரே மெட்டு போட்டு நிகழ்ச்சியில் பாடினார். அந்த பாடல், ‘ஹிந்து என்ற மந்திரம் சங்கம் ஒன்றே தந்திரம், வாய்மையே வெல்லும்’. இந்த பாடல் ஷிபிரில் இரண்டாவதாக வந்தது.

அவர் பிரச்சாரக்காக இருக்கும் போது, ஒரு முறை அவருக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து அவரது உடல் மிகவும் பாதித்தது. இதை கேள்விப்பட்ட அவரது தாயார் மிகவும் வருந்தினார். வீட்டிற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து உடல்நிலையை சரி செய்து பிறகு போகட்டுமே என்று அவர் தன்னுடைய கணவரிடம் வற்புறுத்தினார். அவரின் வற்புறுத்தலுக்கு இணங்க சங்க அதிகாரிகளிடம் பேசி, அவர் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார். வீட்டிற்கு வந்த சில நாட்களில் அவர் உடல் நிலை சீரானது. ஆனால் அவர் தாயார் இன்னும் சில நாட்கள் வீட்டில் தங்கியிருக்க கட்டாயப்படுத்தினார். அவரது தந்தையார் ஒன்றும் சொல்ல முடியவில்லை. மேலும் சில நாட்கள் ஆகியும் ஜோதிஜியை அனுப்புவதற்கு அவரது தாயார் தயாராகயில்லை. இதை கண்ட ஜோதிஜியின் தந்தை கார்யாலயத்திற்கு வந்து, சங்கம் அதிகாரிகளிடம் ’சீக்கிரம் ஜோதிஜியை பிரச்சாரக் ஆக மீண்டும் அழைத்து செல்லுங்கள்’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதன்படி சங்க அதிகாரிகள் ஜோதிஜியிடம் பேசினார்கள். ஒரு நாள் ஜோதிஜி வீட்டில் யாருக்கும் சொல்லாமல் ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தன்னுடையை கார்ய க்ஷேத்திரத்திற்கு சென்று விட்டார்.

அவர் ஸ்ரீ வீரபாகுஜியுடன் 10 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அவர்கள் இருவரும் இணைந்து வேலூர் விபாக்கில் பல நிகழ்ச்சிகளையும், பல சாகஷங்களையும் நடத்தியுள்ளனர். அப்போது வேலூரில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டம் மிகவும் பேசு பொருளாக இருந்தது.

வேலூருக்கு இருந்த அவப் பெயரை நீக்க வேண்டும் என்பதற்காக மறைந்த ஸ்ரீ வீரபாகுஜியுடன் இணைந்து கடும் முயற்சி எடுத்தார். அதன் பயனாக 1981ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போது அயோத்தி ஸ்ரீ ராம விக்கிரம் பிரதிஷ்டைக்கு அது முன்னோடியாக அமைந்தது.

அவர் விஜயபாரதம் ஆசிரியராக இருக்கும் போது, கடுமையாக உழைப்பார். தினசரி மாலையில் வெளியில் சென்று எழுத்தாளர்களை சந்திப்பார். அன்று வந்த எல்லா ஆங்கில பத்திரிகைகளையெல்லாம் படித்து, அடுத்த வாரம் எதை பற்றி கட்டுரை வர வேண்டும் என்று குறிப்பு எடுத்து கொள்வார். தினசரி அவர் தூங்கும் போது இரவு 12 மணி, ஒரு மணி ஆகும்.

பல இளம் பத்திரிகையாளர்களை உருவாக்கினார். இதழியல் பயிற்சி வகுப்புகளை நடத்தினார்.

திரு ஜோதிஜி பல முக்ய நிகழ்வுகளையும் தன்னுடைய நாட்குறிப்பில் பதிவு செய்து வந்தார். அதில் தன்னுடைய குடும்பத்தில் நடந்த நல்லது, கெட்டது போன்ற விஷயங்களையும் பதிவு செய்துள்ளார். அதில் அவர் பட்டாளம் ஷாகாவில் முக்ய சிக்ஷக்காக இருக்கும் போது இருந்த ஸ்வயம்சேவகர்களின் பெயர்களையும் எழுதியுள்ளார். அவர் பிரச்சாரக் வாழ்க்கையில் நடைபெற்ற பல சம்பவங்களை தொகுத்து இருக்கிறார்.

அவரது (10.12.2023) அகால மரணம் நம் அனைவருக்குமே பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அன்னாரின் ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.

#  

சிவராம்ஜி செதுக்கிய சிலை ஸ்ரீ வேதகிரிஜி

சங்கம் மற்றும் சேவாபாரதி கார்யகர்த்தர்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஸ்ரீ வேதகிரிஜி 2023ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

1980 முதல் அவர் சங்கத்தில் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர். ஸ்ரீ சிவராம்ஜியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவரை வழிகாட்டியாக கொண்டு தன்னுடைய சங்க பயணத்தைத் தொடர்ந்தவர். நான் சில ஆண்டுகள் அவருடன் பணியாற்றியவன் என்ற முறையில் எனக்கு கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தொடக்கம் முதல் சேவை பணிகளை அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். மாநகர் சேவா பிரமுக் ஆகவும் பணியாற்றியவர். 1999ஆம் ஆண்டு சேவாபாரதி தமிழ்நாடு அறக்கட்டளை துவங்கப்பட்ட போது, அதில் இரண்டு பேர் நிறுவன அறங்காவலர்கள் இருந்தனர். ஒருவர் திரு. சுந்தர.லட்சுமணன், மற்றொருவர் திரு. வேதகிரி. அதுமுதல் மறையும் வரை அவர் சேவாபாரதி பொறுப்பில் இருந்து சேவை பணியாற்றி, பலருக்கு முன் உதாரணமாக இருந்தவர்.

மறைந்த திரு டி.வி. ராஜகோபால்ஜியுடன் இணைந்து சென்னையில் பெரியவர்களை சம்பர்க்க செய்வார். அவர்களிடம் சேவாபாரதி சார்பாக நடைபெறும் சேவை பணிகளை எடுத்துரைத்து, அதில் அவர்களையும் கலந்து கொள்ள சொல்வார். தமிழ்நாடு முழுவதும் சேவைப் பணிகளுக்கு தேவையான நிதிகளை அதன் மூலம் சேகரித்து விடுவார்.

ஸ்ரீ வேதகிரியிடம் உள்ள இரு ஈர்ப்பு என்னவென்றால், அவர் ஒரு நபரை ஒரு முறை சந்தித்தார் என்றால், அவருடைய நட்பு வட்டரத்தில் அவர் வந்துவிடுவார். கடைசிவரை இருவருக்குள்ளும் ஆத்மர்த்தமான நட்பு இருந்துக் கொண்டே இருக்கும். அதுமட்டுமட்டுமல்ல அவரை ஏதாவது ஒரு பணியிலும் ஈடுபடுத்தி விடுவார்.

ஸ்ரீ வேதகிரிஜி பெரியவர்களிடம் மட்டுமல்ல, ஒவ்வொரு சாதாரண கார்யகர்த்தர் மீதும் கவனம் செலுத்தினார். அவர்கள் செய்த விஷயங்களையும் குறிப்பிட்டு பாராட்டுவார். அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்று தெரியவந்தால், அவற்றை நிவர்த்தி செய்ய பெரும் முயற்சி எடுப்பார். அவர் யாரிடமும் கடிந்து பேச மாட்டார். ஸ்ரீ வேதகிரிஜியிடம் தொடர்பிக்கு வந்தவர்கள் அவரை வாழ்க்கையில் மறக்கவே மாட்டார்கள்.

சேவாபாரதி நடமாடும் மருத்துவ ஊர்திகளை துவங்கிய போது, அதற்கு தேவையான அரசு அனுமதிகளை பெற தீவிரமாக முயற்சி செய்தவர்.

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி பகுதிகளில் மதமாற்றம் செய்ய கிறிஸ்தவர்கள் மிகவும் தீவிரமாக முயற்சி செய்வதை அறிந்த அவர், அதை தடுக்க பல இடங்களில் இலவச டியூஷன் வகுப்புகள், பண்பாட்டு வகுப்புகள் ஆரம்பிக்க மிகவும் முயற்சி செய்தார். இதற்காக குன்றியிருந்த தன் உடல்நிலை பொறுப்படுத்தாமல். பேருந்தில் பயணன் செய்வார். சேவாபாரதி காரை பயன்படுத்துங்கள்ஜி என்று சொல்லியும் கேட்க மாட்டார். அர்த ராத்திரியில் அவர் சுற்றுப்பயணத்தை முடிந்துவிட்டு வீடு திரும்புவார். அதை கேட்கும் போது மனம் மிகவும் கனமாக இருக்கும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சேவாபாரதி வளர அடித்தளமாக இருந்தார். அவர் பல இடங்களில் ஆசிரியைகளைக் கண்டுபித்து, டியூஷன் வகுப்புகளை ஆரம்பித்தார்.

கொரோனா காலகட்டத்தில் பல இளைஞர்கள் பயந்து வீட்டில் ஓடிங்கியிருந்த போது, 70 வயது நிரம்பிய இவர் பலர் நிவாரணப் பணிகளில் பங்குகொண்டார். அவர் வசிக்கும் பகுதியில் மட்டுமல்ல, திருவள்ளூர் மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் பயணித்து நிகழ்ச்சி கலந்து கொள்வார். கார்யகர்த்தர்கள் செய்யும் பணிகளை பைட்டக்கில் நடத்தில் ஆய்வு செய்வார். நீங்கள் வீட்டில பாதுகாப்பாக இருங்கள் என்று பலர் சொல்லியும் அவர் கேட்கவில்லை. சேவை செய்வதில் அவருக்கு ஒரு அலாதியான விருப்பம்.

ஸ்ரீ வேதகிரிஜிக்கு ஆங்கிலத்தில் மிகவும் புலமை வாய்ந்வர். சேவாபாரதியில் அவர் தயாரித்த திட்ட அறிக்கை, பிரசுரங்களில் அவருடைய ஆங்கிலப் புலமை மிளிரும். அதுமட்டுமல்ல தமிழிலும் அவர் புலமை மிக்கவர்.

நமக்கு யாராவது வாட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பினால், அதை ஏற்று கொண்டவிதமாக கை கும்பிடுவது போன்ற சின்னங்கள் மூலம் நாம் பதிலளிப்போம். அவர் அதற்கு அருமையான வாசகத்தை குறிப்பிட்டு அவரின் சேவையை பாராட்டுவார்.

அவரிடம் பல விஷயங்களைப் பற்றி பேசும் போது, எனக்கு இது ஸ்ரீ சிவராம்ஜி கற்றுக் கொடுத்த பாடம் என்று குறிப்பிடுவார். ஸ்ரீ சிவராம்ஜியின் ஒரு அணுக்க தொண்டராக அவர் வாழ்த்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் திருக்கடையூரில் நடைபெற்ற அவரது பீமரதசாந்தி விழாவில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் நானும் கலந்து கொண்டு, அவரின் ஆசிகளை பெற்றதை, பெறும் பாக்கியமாக கருதுகிறேன்.

அவர் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துள்ளதாக நான் கருதுகிறேன். பிறர்க்கென வாழ்பவர்களே வாழ்பவர்கள், மற்றவர்கள் நடைபிணத்திற்குச் சமமானவர்கள் என்ற சுவாமி விவேகானந்தரின் அறைகூவலுக்கு உதாரணமாக அவர் வாழ்த்துள்ளார்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கார்யகர்த்தர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா நற்கதி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

#


இந்து அனைவரும் சகோதரர்கள் என்று உணர்த்திய ஆர்.எஸ்.எஸ்.

பாரதத்தின் வட பகுதிகளில் திருமணத்தின் போது மணமகன் குதிரை மீது அமர்ந்து ஊர்வலமாக வருவது இந்துக்களின் ஒரு பிரிவினரின் பழக்கம். பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தாங்களும் அவ்வாறு செய்ய விரும்பினர். இது பிடிக்காத சிலர், அதை கடுமையாக எதிர்த்தனர். பல இடங்களில் போராட்டங்கள் வெடித்தன.

ராஜஸ்தான் மாநிலம், தெளசா மாவட்டத்தில் உள்ள மட்லானா கிராம ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் இதற்கு முற்றுபுள்ளி வைக்க விரும்பினார்கள். இந்த ஊரில் ஷாகா ஆரம்பித்து ஐந்து ஆண்டுகள் ஆகியிருந்தன.

2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5ஆம் நாள் அந்த கிராமத்தில் பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரின் திருமணம் நடைபெற இருந்தது. அதையொட்டி மணமகன் குதிரை சவாரி செய்யும் நிகழ்ச்சியை ஊர் பெரியவர்களின் நல்லாசியுடன் நடத்த ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள் விரும்பினார்கள்.

ஸ்வயம்சேவகர்கள் எல்லா ஜாதி தலைவர்களையும் நேரில் சந்தித்து பேசி அவர்களின் ஆதரவை பெற்றனர். குறிப்பிட்ட தேதியில் மணமகன் குதிரை சவாரி செய்யும் நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் கலந்துக் கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து கூறினார்கள். இது அந்த ஊரில் மட்டுமல்லாமல், பக்கத்து பல ஊர்களிலும் பேசும் பொருள் ஆகியது.

அதற்கு பிறகு அந்த கிராமத்தில் குதிரை சவாரி விஷயத்தில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்பட்டதில்லை. இந்துக்கள் அனைவரும் சகோதரர்கள்; இந்துக்கள் எவரும் தாழ்ந்தவர் அல்ல என்று நிரூபித்தனர் ஆர்.எஸ்.எஸ். ஸ்வயம்சேவகர்கள்.

#  



பட்டியல் சமுதாய மக்களை கோயிலுக்குள் அழைத்து வழிகாட்டிய ஆர்.எஸ்.எஸ்.


ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கே.வேலூர் கிராமம். பட்டியல் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தின் மத்தியில் ஸ்ரீ ஆதிகேவசப் பெருமாள் கோயில் உள்ளது. சில கிராமங்களைப் போல இந்த ஊரியிலும் பட்டியல் சமுதாய மக்கள் இந்த கோயிலுக்குள் நுழைய முடியாது. இதுதான் 2005ஆம் ஆண்டு வரை இருந்த நிலைமை.

2006ஆம் ஆண்டு இந்த நிலைமை மாறிவிட்டது. காரணம் ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரின் பணி.

அப்போதைய வேலூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளராக இருந்தவர் திரு தேவநாதன். ராணிப்பேட்டையை மையமாக வைத்து, அவர் வேலூர் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆர்.எஸ்.எஸ் ஷாகா ஆரம்பிப்பது வலுப்படுத்துவது போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதிலும் தீவிரமாக இருந்தார்.

அவருடைய மாமனார் ஊர் கே.வேலூர். அங்கு திரு தேவநாதன் முயற்சியால் ஒரு ஷாகா ஆரம்பிக்கப்பட்டது. திரு தேவநாதன் தன்னுடைய மாமனார் திரு ரங்கநாதச்சாரியாரிடம் ஆர்.எஸ்.எஸ்., இந்து ஒற்றுமை, மதமாற்றம், தீண்டாமை குறித்து பேசுவார். அவர் மனதில் இந்து ஒற்றுமை, சமுதாய நல்லிணக்கம் விதையை விதைத்தார்.

திரு ரங்கநாதாச்சாரியார் பள்ளி ஆசிரியர். அவர் பல கிராமங்களில் ஆசிரியராகப் பணியாற்றி நல்ல பேரை எடுத்தவர். அத்துடன் மிகவும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர். சமுதாய நல்லிணக்கம் விதை அவரது மனதில் விளைய ஆரம்பித்தது.

திரு. ரங்கநாதாச்சாரியார் பணியிலிருந்து ஓய்வு பெற்றதும் அந்த ஊரில் பழையடைந்து இருந்த ஸ்ரீ ஆதிசேகவப் பெருமாள் கோவிலை புணர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் நடத்த விரும்பினார் அதற்காக தன் வயதையும் பொருட்படுத்தாமல் பலரிடம் சென்று நிதி சேகரித்தார். பராமரிப்பு பணிகளையும் தானே நேரில் கவனித்தார்.

கும்பாபிஷேகத்திற்கு தேதி மற்றும் மற்ற விஷயங்களைப் பற்றி ஆலோசிக்க ஊர் முக்கியஸ்தர்கள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை எப்படி நடத்துவது என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்தார்கள்.

திரு ரங்கநாதச்சாரியார் முறை வந்ததும். அவர் குறிப்பிட்டார். “கும்பாபிஷேகத்தை இந்த ஊரில் உள்ள அனைவரும் சேர்ந்து நடத்த வேண்டும்” என்றார். அந்த கூடியிருந்த அந்த முக்கியஸ்தர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. 'நாம் எல்லோரும் சேர்ந்துதானே இது நடத்தப் போகிறோம் நீங்க என்ன சொல்ல வரீங்க' என்று கேள்விக்குறியுடன் அவரை பார்த்தனர்.

அப்போது அவர் விவரமாக பேசினார். “இந்தக் கோவிலுக்குள் இதுநாள் வரை பட்டியல் சமுதாய மக்கள் நுழைந்ததில்லை. இனி அவர்களையும் இந்த கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க வேண்டும். இந்த கோவில் கும்பாபிஷேகப் பணியிலும் அவர்களது பங்கும் இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இதைக் கேட்டதும் அங்கு இருந்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சி. வேறு யாராவது இக்கருத்தைக் கூறியிருந்தால் அங்கு என்ன ஆயிருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த கருத்தைச் சொன்னவர் அந்த ஊரில் மட்டுமல்ல, பக்கத்து பல கிராம மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர்; ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்; அவரின் இந்த கோரிக்கை ஊர் முக்கியஸ்தர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

ஆனாலும் திரு. ரங்கநாதாச்சாரியார் தொடர்ந்து தன் கோரிக்கைக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்தார். கடைசியில் ஊர் முக்கியஸ்தர்கள் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

இந்த விஷயத்தை பட்டியல் சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு பட்டாச்சாரியாரே நேரில் சென்று தெரிவித்தார். அவர்களுக்கும் ஒரே ஆச்சரியம். நாட்டில் எந்த மாற்றம் வந்தாலும் அது இந்த கிராமத்தில் எட்டாக கனியாக இருக்கும் என்று எண்ணியவர்கள், தற்போது எட்டும்கனியாகி விட்டது உணர்ந்து உற்சாகம் ஆகினர்.

கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி விரதம் இருந்து. நெற்றியில் திருமண இட்டு பயபக்தியோடு கும்பாபிஷேகத்தில் கலந்துக் கொண்டனர்.

அந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பட்டாச்சாரியாரின் மகன் திரு முகுந்தன் கூறுகிறார்.  “இந்த கிராமத்தில் பட்டியல் சமுதாய மக்கள் காலடி படாத பகுதி எதுவுமே இல்லை - இந்த கோவிலை தவிர. இந்த கோவிலுக்குள் அவர்கள் நுழைந்ததே இல்லை. நீங்களும் கோவிலுக்கு வரலாம் என்று சொன்னவுடன் அவர்களுக்கு ஒரே சந்தோஷம். அவர்களிடம் இருந்த சந்தோஷத்தில் கோவிலுக்குள் நுழைந்தவுடன் இங்க இன்ன சாமி இருக்கு அங்க என்ன இருக்கு என்று அங்கும் இங்கும் ஒடியதைப் பார்த்தது என் கண்முன்னே நிற்கிறது. அவர்களுக்கு இத்தனை நாள் தீங்கு விளைத்து விட்டோம் என்பதை உணர்ந்தேன்.”

பட்டாச்சாரியாரின் உபதேசங்கள் ஊருக்கு மட்டுமல்ல. தன் சொந்த வீட்டிலும் கடைப்பிடித்தார். நாங்கள் கோவிலுக்கு சென்று ஊர் மக்களிடம் கலந்து உரையாடிவிட்டு பட்டாச்சாரியாரின் வீட்டுக்கு வந்து இரவு உணவு சாப்பிடோம். அப்போது பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் எங்களுடன் உணவு உண்டனர்.

நகரத்தில் ஜாதி வேற்றுமைகள் அவ்வளவாக பார்ப்பதில்லை. ஆனால் கிராமத்தில் அது ரத்தத்தில் ஊரிய விஷ(ய)ம். ஆனால் ஊரில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டது என்றால் அதற்கு காரணம் ஆர்.எஸ்.எஸ்.

  • (2006ஆம் ஆண்டு ஸ்ரீ குருஜி நூற்றாண்டு விழாவை யொட்டி அகில பாரத அளவில் சமுதாய நல்லிணக்க மலர் ஒன்று இந்தியில் வெளியிடப்பட்டது. அதில் வட தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு சம்பவங்கள் பிரசுரம் ஆகியது. அதில் ஒன்று இந்த கே.வேலூர். மற்றொன்று தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகிலுள்ள ஜோதிஹள்ளி கிராமம்).
#